Enable Javscript for better performance
உருமாற்றக் கட்டணம் என்ற பெயரில் முறைகேடு- Dinamani

சுடச்சுட

    

    உருமாற்றக் கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது என தில்லி மாநகராட்சிகள் மீது ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
    இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
    பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, சரக்கு, சேவை வரி, அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 
    இந்நிலையில், தில்லி மாநகராட்சிகளை ஆளும் பாஜக, உருமாற்றக் கட்டணம், சீலிங் நடவடிக்கை என்ற பெயரில் வணிகர்களை அச்சுறுத்தி வருகிறது. உருமாற்றக் கட்டணம் என்ற பெயரில் தில்லி மாநகராட்சிகள் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளன. 
    உருமாற்றக் கட்டணம், பதிவுக் கட்டணம், ஒரே முறை செலுத்தப்படும் பார்க்கிங் கட்டணம் ஆகியவை தொடர்பாக மண்டல வாரியாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்து தெற்கு தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
    தெற்கு தில்லியில் மட்டும் உருமாற்றக் கட்டணமாக இதுவரை ரூ. 966 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகை, "தில்லி மாஸ்ட்ர் பிளான் 2021-இன்' படி "எஸ்கிரோ' காப்போலை கணக்கில் வைக்கப்பட வேண்டும். அந்தத் தொகையை வாகன நிறுத்த மையங்களை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிடவும் வேண்டும். மேலும், "எஸ்கிரோ' கணக்கில் வைக்கப்பட்ட தொகை குறித்த விவரத்தை அரசுக்கு காலாண்டுக்கு ஒருமுறை தெரிவிக்க வேண்டும். ஆனால், தில்லி மாநகராட்சிகள் அந்தத் தொகையை பொதுக் கணக்கில் மாற்றி, பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளன. திட்டங்களில் கமிஷன் பெற்று வருகின்றன. இதன் மூலம் தில்லி வணிகர்களை மாநகராட்சிகள் ஏமாற்றியுள்ளன.
    உருமாற்றக் கட்டணத்தைச் செலுத்த வணிகர்கள் தயாராக உள்ளனர். இதுபோன்ற கட்டணத்தை ஒருமுறைதான வசூலிக்க வேண்டும். சாவ்ரி பஜார், சதர் பஜார் என்று பெயரே பஜாராக உள்ள பகுதிகளில் ஏன் உருமாற்றக் கட்டணம் வசூலிக்க வேண்டும்? நிலத்தையும், குடியிருப்புப் பகுதிகளையும் வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தும் போதுதான் உருமாற்றக் கட்டணம் வசூலிக்க வேண்டும். உருமாற்றக் கட்டணம் வசூலிக்க கட்டடத் துறையின் அதிகாரிகளை ஏஜெண்டுகளாக மாநகராட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. பாஜகவை ஆதரித்த வணிகர்களும், தற்போது உருமாற்றக் கட்டணம் என்ற பெயரில் நடைபெறும் வசூலை கண்டு கோபம் அடைந்துள்ளனர் என்றார் திலீப் பாண்டே. 
     

    தெற்கு தில்லி மேயர் பதிலடி
    உருமாற்றக் கட்டணம் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசு பொய் சொல்வதாக தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத் கூறினார்.
     உருமாற்றக் கட்டணம் தொடர்பாக ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் மேயர் கூறியதாவது: 
    பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தெற்கு தில்லி மாநகராட்சி மீது அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும், உருமாற்றக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை "எஸ்கிரோ கணக்கில்' இருந்து பொதுக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தவறான தகவலை முன்வைத்துள்ளார். மாஸ்டர் பிளான்- 2021 திட்டத்தின்படியே உருமாற்றக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எஸ்கிரோ கணக்கில் வைக்கப்பட்ட தொகைகள் தொடர்பாக தெளிவான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் எக்ஸிரோ கணக்கில் ரூ.1,195.71 கோடி வைக்கப்பட்டது. இத்தொகையில் ரூ.270 கோடி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க செலவிடப்பட்டது. எஞ்சிய ரூ.925 கோடி இன்னமும் எக்ஸிரோ கணக்கில்தான் உள்ளது. இத்தொகை தெற்கு தில்லி மாநகராட்சியின் மேம்பாட்டுப் பணிகளுக்காக செலவிடப்படும் என்றார் மேயர்.

    உண்மைக்கு புறம்பானது: பாஜக
    உருமாற்றக் கட்டணம் தொடர்பாக ஆம் ஆத்மி தெரிவித்த குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்று தில்லி பாஜக வியாழக்கிழமை தெரிவித்தது.
    இது தொடர்பாக தில்லி பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பிரவீன் கபூர் மற்றும் அசோக் கோயல் கூறியதாவது: 
    தில்லியில் உள்ள 351 சாலைகளை அறிவிக்கை செய்யாததும், காலனிகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்படாததுமே வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படுவதற்கு பிரதான காரணமாகும். இந்நிலையில், தில்லி அரசின் தவறுகளை மறைக்க, மாநகராட்சிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்துகிறது ஆம் ஆத்மி அரசு. தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் இடைவிடாது மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. 
    "எஸ்கிரோ' கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆம் ஆத்மி கூறுவதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இதுபோன்று பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி மக்களை திசை திருப்ப ஆம் ஆத்மி முயல்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai