Enable Javscript for better performance
கோஷ்டி பூசலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: பாஜக தலைமை எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கோஷ்டி பூசலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: பாஜக தலைமை எச்சரிக்கை

    By DIN  |   Published on : 19th January 2018 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி பாஜகவில் கோஷ்டி பூசலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    கிழக்கு உத்தர பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை பூர்வாஞ்சல் பகுதி என்பார்கள்.  தில்லியில் மொத்த மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் குறிவைத்து பிகாரைச் சேர்ந்த மனோஜ் திவாரி,  தில்லி பாஜகவின் தலைவராக 2016, நவம்பரில் நியமிக்கப்பட்டார்.  இவரும் தில்லியில் உள்ள பூர்வாஞ்சல் மக்களைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 2017 -இல் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல்களில் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த பலர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு வெற்றி பெற்றனர். 
    இந்நிலையில், தில்லி பாஜகவில் பூர்வாஞ்சல் பகுதியினரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக பஞ்சாப், குஜராத் மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இது தொடர்பாக தில்லி பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: 
    தில்லி பாஜகவில் அதிகரித்து வரும் பூர்வாஞ்சல் ஆதிக்கத்தால் சுபாஷ் சக்தேவ், ஆர்.பி.சிங், நீல் தாமன் காத்ரி போன்ற பல தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். மனோஜ் திவாரி பூர்வாஞ்சல் பகுதி மக்களை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
    இந்நிலையில், தில்லி பாஜகவில் கோஷ்டி பூசல்களில் ஈடுபடுவோர்களுக்கு கட்சித் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தில்லி பாஜகவில் கோஷ்டிகளுக்கு இடம் இல்லை என்பதை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் செவ்வாய்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவாகக் கூறியுள்ளார். பாஜக தலைமையைச் சந்தித்து மனோஜ் திவாரி  மீது புகார் கூறிய தில்லி பாஜகவினரை கட்சித் தலைமை கடுமையாக எச்சரித்து  திருப்பி அனுப்பியுள்ளது. 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை மனோஜ் திவாரி தலைமையில்  எதிர்கொள்வதில்  தலைமை உறுதியாக உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai