Enable Javscript for better performance
சரத் பிரபுவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: விமானத்தில் கோவை சென்றது- Dinamani

சுடச்சுட

    

    சரத் பிரபுவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு: விமானத்தில் கோவை சென்றது

    By DIN  |   Published on : 19th January 2018 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் மர்மமான முறையில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர் சரத் பிரபுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் தில்லியில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
    திருப்பூர் மாவட்டம், பாரப்பாளையத்தைச் சேர்ந்த செல்வமணியின் மகன் சரத் பிரபு (28), தில்லி பல்கலை.யின் கீழ் செயல்படும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் (எம்டி) முதலாமாண்டு படித்து வந்தார். 
    தில்ஷாத் கார்டன் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அவர், புதன்கிழமை காலை தனது அறையின் கழிப்பறைக்கு வெளியே மர்மமான முறையில் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. அவரை அதே குடியிருப்பில் தங்கியிருந்த சக மாணவர்கள் சிகிச்சைக்காக தில்ஷாத் கார்டனில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் சிசிச்சைக்காக கொண்டு சென்றனர். 
    ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சரத் பிரபு தங்கியிருந்த அறைக்குச் சென்று சோதனையிட்டனர். அங்கு ஊசி போடும் சிரிஞ்சு, இன்சுலின் மற்றும் வேதிப்பொருள் இருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். 
    இதையடுத்து, சரத் பிரபுவுடன் படிக்கும் சக மாணவர்கள், மூத்த மாணவர்கள் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவரின் தந்தை செல்வமணி, உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
     பிரேதப் பரிசோதனை: இந்நிலையில், மூத்த மருத்துவர் வர்மா தலைமையிலான மூவர் அடங்கிய மருத்துவக் குழுவினர், சரத் பிரபுவின் உடலை வியாழக்கிழமை நண்பகலில் பிரேதப் பரிசோதனை செய்தனர். 
    இந்நிகழ்வு விடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


    துணை முதல்வர் அஞ்சலி: 
    இதனிடையே, தில்லியில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தில்ஷாத் கார்டனில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சரத் பிரபுவின் உடலுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது தந்தை, உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    விமானம் மூலம் பயணம்: இந்நிலையில், பிற்பகல் 3 மணிக்குப் பிறகு மாணவரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் தில்லி விமான நிலையத்துக்கு அவரது குடும்பத்தினர் எடுத்துச் சென்றனர். அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
    "மாணவர் சரத் பிரபு மரணம் குறித்த தொடக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது பிரேதப் பரிசோதனை முடிவடைந்துள்ளது. இதன் அறிக்கை வந்த பிறகு அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும்' என்று தில்லி போலீஸார் கூறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai