Enable Javscript for better performance
ஜி.டி.பி. மருத்துவமனையில் முதல்வர் திடீர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு தில்லி தில்ஷாத் கார்டனில் உள்ள ஜி.டி.பி. மருத்துவமனையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    இந்த ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தில்லி சுகாதாரத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருடன் இந்த திடீர் ஆய்வு மேற்கொண்டேன். மருத்துவமனையில் மருந்துகள் வழங்கும் இடத்தில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இது தொடர்பாக நோயாளிகளிடம் விசாரித்தேன். மருந்துகள் பெறுவதற்கு 3 அல்லது 4 மணி நேரமும்,  சில நாள்களில் நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். நோயாளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகள் கிடைக்கும் வகையில், ஜி.டி.பி. மருத்துவமனையில் மருந்துகள் வழங்கும் இடத்தில் மேலும் ஒரு கவுன்ட்டர் திறக்கப்பட்டு, மருந்தாளுநரை நியமிக்க வேண்டியுள்ளது.
     மருத்துவமனையின் செயல்பாடு திருப்தியாக இருப்பதாக பொதுமக்கள்  தெரிவித்தனர். அறுவை சிகிச்சை தொடர்பாக நோயாளிகளிடம் கேட்ட போது,  சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்காக 3 மாதங்கள் வரை நேரம் அளிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால்,  அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் போது தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அறுவை சிகிச்சைக்கான செலவை ஏற்கும் திட்டத்தை  தில்லி அரசு செயல்படுத்தி வருகிறது. இத் திட்டம் தொடர்பாக மருத்துவர்கள் போதுமானதாக அறிந்திருக்கவில்லை என்பதால், திட்டம் தொடர்பாக போதுமான விழிப்புணர்வு உருவாக்கப்படும். தகவல் தொடர்பு இடைவெளி இருப்பது இந்த  ஆய்வின் மூலம் அறிய முடிந்தது.  நோயாளிகள் எங்கு செல்வது என்பது அறியாமல் அலையும் நிலையை காண முடிந்தது.  இதுபோன்ற நோயாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை அமர்த்த வேண்டியுள்ளது. 
    பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி,  வகுப்பறைகள்,  நடைக் கூடம் ஆகியவற்றில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.  வகுப்பறையில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவியின் பதிவை மாணவர்களின் பெற்றோர்கள் நேரலையாக  காணும் வகையில் விரைவில்  வசதி ஏற்படுத்தப்படும். சில பள்ளிகளில் முன்னோட்டம் பார்க்கப்பட்டதில் இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றார் கேஜரிவால். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai