Enable Javscript for better performance
துணி வியாபாரியிடம் மோசடி: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் துணி வியாபாரியை ஏமாற்றியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.1 லட்சம் பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து மத்திய மாவட்ட காவல் துணை ஆணையர் மந்தீப் எஸ். ரந்தவா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
    தில்லி சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வாஜித் அலி. இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி போலீஸில் ஒரு புகார் அளித்தார்.
    அதில் கூறப்பட்டுள்ளதாவது: 
    என்னிடம் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 750 துணிவகைகளுக்கு ஆர்டர் கொடுத்தார். அவற்றை கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அவர் கூறியபடி, அங்கு துணிகளுடன்சென்றேன். அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு இளைஞர் அந்தப் பொருள்களை அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் ஏற்றுமாறு கூறினார். நானும் அவர் கூறியவாறு செய்தேன். 
    அதற்கான பணத்தை கரோல் பாகில் உள்ள கடையில் வாங்கிச் செல்லுமாறு அந்த இளைஞர் கூறினார்.இதையடுத்து, அந்தப் பையனுடன் அவர் கூறிய கடைக்குச் சென்றேன். கடையில் இருந்தவர் தாம் ஏதும் ஆர்டர் கொடுக்கவில்லை எனக் கூறினார். இதையடுத்து, ஏதோ தவறு நடந்துவிட்டதாக அந்த இளைஞர் கூறினார். எனது பொருள்களை எடுத்துச் செல்வதற்காக சம்பவ இடத்துக்குச் சென்றேன். ஆனால், அங்கு தள்ளுவண்டியைக் காணவில்லை. என்னுடன் வந்த இளைஞரும் காணாமல் போய்விட்டார். இதன்பின்னர்தான் நான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது என்று அந்தப் புகாரில் வாஜித் அலி கூறியிருந்தார். 
    இதையடுத்து, வியாபாரியிடம் மோசடியில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமரா மூலம் குற்றத்தில் ஈடுபட்டவரின் அடையாளம் கண்டறியப்பட்டது. தீவிர முயற்சிகளுக்குப் பிறகு இக்குற்றத்தில் ஈடுபட்ட சஞ்சய் அரோரா கைது செய்யப்பட்டார். அவருடைய வீட்டில் இருந்து 328 துணிவகைககள்மீட்கப்பட்டன. மேலும், காந்தி நகர், ஹனுமான் மந்திர் பகுதியில் உள்ள ரிஸ்வான் என்பவரது கடையில் இருந்து 412 துணி வகைகள்மீட்கப்பட்டன. விசாரணையில் சஞ்சய் அரோராவிடமிருந்து அவற்றை ரிஸ்வான் வாங்கியிருந்ததும், பல கடைக்காரர்களிடம் சஞ்சய் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல் உயர் அதிகாரி மந்தீப் எஸ்.ரந்தவா கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai