Enable Javscript for better performance
"சீலிங்' நடவடிக்கைக்கு எதிராக தெற்கு தில்லியில் கடையடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    "சீலிங்' நடவடிக்கைக்கு எதிராக தெற்கு தில்லியில் கடையடைப்பு

    By DIN  |   Published on : 20th January 2018 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீலிங் நடவடிக்கைக்கு எதிராக தெற்கு தில்லியில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது.
    உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு உத்தரவின் பேரில் தெற்கு தில்லியில் மார்க்கெட்டுகளில் சீலிங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக, டிஃபன்ஸ் காலனி, ஹோஸ் காஸ், கிரீன் பார்க் எக்ஸ்டென்ஷன், செளத் எக்ஸ்டென்ஷன், கிரேட்டர் கைலாஷ் ஆகிய மார்க்கெட்டுகளில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
    இது குறித்து செளத் எக்ஸ்டென்ஷன் மார்க்கெட் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த விஜய்குமார் கூறுகையில், "தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீலிங் நடவடிக்கையை ஜூன் 20-ஆம் தேதிக்க தள்ளி வைக்கவும், ப்ளோர் ஏரியா பரப்பளவு விகிதத்தை 300 சதம்வீதம் வரை உயர்த்தவும், கூடுதலாக உருமாற்றக் கட்டணம் செலுத்திய தரைதளத்தில் உள்ள கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலிங் நடவடிக்கையை நீக்கவும் வலியுறுத்தி இக்கடையடைப்பு நடைபெற்றது' என்றார்.
    டிஃபன்ஸ் காலனி மார்க்கெட் வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் குப்தா கூறுகையில், "எந்தவொரு வணிகரும் தங்களது கடைகளை அடைக்க விரும்பமாட்டார். ஆனால், சீலிங் நடவடிக்கைக்குக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய கடையடைப்பு நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை' என்றார். 
    சிஏஐடி ஆதரவு: இந்த கடையடைப்புக்கு அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கண்டெல்வால் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தில்லி மாநகராட்சிச் சட்டத்தில் (1957) தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளுக்கு எதிராக சீலிங் நடவடிக்கை அமைந்துள்ளது. கண்காணிப்புக் குழுவின் கொத்தடிமைகள் போல தில்லி மாநகராட்சி அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். சீலிங் நடவடிக்கையால் உள்ளூர் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தவிலை மார்க்கெட்டுக்கு வெளி மாநில வணிகர்கள் வருவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். மக்களும் மார்க்கெட்டுகளுக்கு வருவதற்கு அச்சமடைகின்றனர். சீலிங் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். வணிகர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வணிகர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தவறினால், தில்லி முழுவதும் கடையடைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகும். 351 சாலைகளை வணிகம் சார்ந்த சாலைகளாக அறிவிக்கும்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தில்லி அரசுக்கு மாநகராட்சிகள் பரிந்துரைத்தன. 
    ஆனால், அந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக தலையிட்டு, மாநகராட்சிகள் பரிந்துரைத்த 351 சாலைகளையும் வணிகம் சார்ந்த சாலைகளாக அறிவிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai