Enable Javscript for better performance
பைக் - டிரக் மோதல்: நண்பர்கள் இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஹெல்மட் அணியாமல் நண்பர்கள் மூவர் சென்ற மோட்டார்சைக்கிளும் டிரக்கும் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.
    தெற்கு தில்லியில் வியாழக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
    தில்லியில் வசித்து வந்தவர் ஃபிரோஸ் (17). இவரது நண்பர்கள் மோனு (15), ரோஹித் (16). நண்பர்களான மூவரும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தெற்கு தில்லியில் வெவ்வேறு பள்ளிகளில் பயின்று வந்தனர். இந்நிலையில், ஃபிரோஸின் பிறந்த நாள் பரிசாக மோட்டார்சைக்கிள் ஒன்றை அவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை தில்லியில் இதமான வானிலை நிலவியதால், மூவரும் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர். 
    மோட்டார்சைக்கிளை மோனு ஓட்டிச் சென்றுள்ளார். ஃபிரோஸ் நடுவிலும், ரோஹித் பின்புறத்திலும் உட்கார்ந்து சென்றனர். இந்நிலையில், தெற்கு தில்லி, தசரதபுரி அருகே செல்லும் போது, போக்குவரத்து போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்கும் வகையில் போக்குக் காட்டினர். 
    அப்போது, அந்த வழியாக வந்த டிரக்கும், இந்த மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. விபத்து நடந்த உடனேயே டிரக் ஓட்டுநர் அயோத்யா பாண்டே வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். 
    இதையடுத்து, விபத்தில் பலத்த காயமடைந்த மூவரையும், உள்ளூர் பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 
    ஆனால், ஃபிரோஸ், மோனு ஆகிய இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரோஹித் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, டிரக் ஓட்டுநரை சில மணி நேரத்தில் கைது செய்தனர்.
    இந்த விபத்து குறித்து சிகிச்சை பெற்று வரும் ரோஹித் கூறுகையில், "நாங்கள் வீட்டுக்கு சென்றடையவிருந்த நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது. அப்போது என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால், டிரக் எங்களை நோக்கி வந்த போது சப்தம் எழுப்பினேன். என் கண் முன்னே எனது நண்பர்கள் உயிரிழந்தது மிகவும் வருத்தமாக உள்ளது. என் வாழ்வில் நீங்காத சோகத்தை வரவழைத்துவிட்டது' என்றார்.
    ஃபிரோஸின் சகோதரர் முசாஃபர் கூறுகையில், "கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் ஃபிரோஸுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த மோட்டார்சைக்கிளை தந்தை வாங்கிக் கொடுத்தார். அதற்கு தந்தை தவணைத் தொகை செலுத்தி வருகிறார். அண்மையில்தான் ஃபிரோஸும் அவரது நண்பர்களும் மோட்டார்சைக்கிளை ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டனர். விபத்தில் ஃபிரோஸும், நண்பரும் இறந்தது குறித்த தகவல் அறிந்ததும் பெற்றோர் சோகத்தில் மூழ்கினர். அவர்களை ஆறுதல்படுத்த முடியவில்லை' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai