Enable Javscript for better performance
போதைப் பொருள், சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க வேண்டும்: காவல் துறைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    போதைப் பொருள், சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க வேண்டும்: காவல் துறைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு

    By DIN  |   Published on : 20th January 2018 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் போதைப் பொருள், சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க வேண்டும் என காவல் துறைக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளார்.
    இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், போதைப் பொருள், சட்ட விரோத மதுபான விற்பனை ஆகியவற்றைத் தடுக்க காவல் துறை, கலால் துறை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. 
    மேலும், எந்தப் பகுதியில் அதிக அளவிலான போதைத் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும், போதைக்கு அடிமையானவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மறுவாழ்வுத் திட்டம் குறித்தும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. 
    இதைத் தொடர்ந்து, போதைக்கு அடிமையானவர்களை மீட்டு,அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, தொழிற்பயிற்சி உள்ளிட்டவற்றை அளிக்கும் திட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த, கட்டமைக்கப்பட்ட அதிரடிப் படை சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
    மேலும், போதை பொருளுக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு இயக்கத்தை ஊடகங்கள் வாயிலாக நடத்தவும், இதில் கல்வி நிறுவனங்களை ஈடுபடுத்தவும் காவல் துறை, கலால் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். போதைப் பொருள், சட்டவிரோத மதுபானம் ஆகியவற்றின் விற்பனையைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    இந்த ஆய்வுக் கூட்டத்தில் தில்லி தலைமைச் செயலாளர், தில்லி உள்துறை முதன்மைச் செயலாளர், காவல் துறை ஆணையர், காவல்துறை சிறப்பு ஆணையர், காவல் இணை ஆணையர்கள், போக்குவரத்துக் காவல் துறை சிறப்பு ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    ஆக்கிரமிப்பு: தில்லி உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட 29 முக்கியச் சாலைகளில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டமும் துணைநிலை ஆளுநர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    இதில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துக் காவல்துறை, மாநகராட்சிகள், போக்குவரத்துத் துறை ஆகியவை இணைந்து பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்க உத்தரவிட்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத்துத்துத் துறை ஆகி யவற்றின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai