Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு விவகாரம்: தில்லி அரசுக்கு என்ஜிடி நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    மழைநீர் சேகரிப்பு விவகாரம்: தில்லி அரசுக்கு என்ஜிடி நோட்டீஸ்

    By DIN  |   Published on : 20th January 2018 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்தவில்லை என தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு தில்லி அரசுக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 
    இது தொடர்பாக தில்லியைச் சேர்ந்த மகேஷ் சந்திரா சக்ஸேனா தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், "தில்லியில் உள்ள அரசு, மற்றும் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மழைநீர் சேகரிப்பு வசதியை அவர்களது சொந்தச் செலவில் இரு மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. 
    ஆனால், தில்லி அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புச் சொஸைட்டிகள் இதுபோன்ற மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்தவில்லை. மேலும் இந்த வசதிகள் இருந்தாலும் அவை செயல்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உத்தரவை உரிய காலத்தில் நிறைவேற்றவில்லை என்றால் சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்திருந்தது.
     மேலும், இதற்காக ஒரு குழுவை அமைத்த தீர்ப்பாயம், பள்ளிகள், கல்லூரிகள் அந்தக் குழுவை அணுகுமாறும் உத்தரவிட்டிருந்தது. இக்குழு கல்வி நிறுவனங்களின் வளாகங்களை ஆய்வு செய்து, மழைநீர் சேகரிப்பு அமைப்பு செயல்படுவதற்கான அனுமதியை அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த இயலாதபட்சத்தில் அதுபற்றி விவரத்தை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், அதுபோன்ற மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை தில்லியில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக தில்லி அரசுக்கு தகுந்த உத்தரவுகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
    இந்த மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி யு.டி. சால்வி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தில்லி அரசின் பொதுப் பணித் துறை, கல்வி இயக்ககம், மத்திய நிலத்தடி நீர் ஆணையகம், தில்லி ஜல் போர்டு மற்றும் இதர அமைப்புகள் பதிலை மார்ச் 20-ஆம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai