Enable Javscript for better performance
அடர்பனிமூட்டம்: 150 விமானங்கள், 51 ரயில்கள் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லி மற்றும் வட மாநிலங்களில் சனிக்கிழமை காலையில் நிலவிய அடர் பனிமூட்டம் காரணமாக 150 விமானங்கள் தாமதமாக வந்தன. மேலும், 25 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோல 51 ரயில்கள் தாமதமாக வந்தன. 15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
    தில்லியில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை அடர் பனிமூட்டம் நிலவியதால் விமான சேவை, ரயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு குளிர்ந்த காற்று வீசிவந்தாலும், வெப்பநிலை ஓரளவு சீரடைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. இதனால், ரயில், விமானங்களின் சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை அடர்பனிமூட்டம் நிலவியது. மேலும், குளிர் காற்றும் வீசியதால் குறைந்தபட்ச வெப்பநிலை மீண்டும் 5 டிகிரி செல்சியஸுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலையிலும் அடர்பனிமூட்டம் நிலவியது. இதனால், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "காலையில் காண்பு திறன் வெகுவாகக் குறைந்து 200 மீட்டருக்கு சென்றதாலும், மோசமான வானிலையாலும் 150 விமானங்கள் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. மேலும், 25 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. காண்புதிறன் குறைந்தது மற்றும் வேறு சில காரணத்தால், 21 விமானங்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஜெய்ப்பூர், மும்பை மார்க்கத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
    காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும்தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானங்களின் வருகையில் சுமார் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரையிலும் தாமதம் ஏற்பட்டது. விமான ஓடுபாதையில் ஒரு கட்டத்தில் காண்புதிறன் 25 மீட்டராகக் குறைந்தது. பின்னர் காண்புதிறன் 9 மணியளவில் படிப்படியாக உயர்ந்தது' என்றனர்.
    இதேபோல, ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. சுமார் 51 ரயில்கள் தாமதமாக வந்தன. மோசமான வானிலை காரணமாக 15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. காண்புதிறன் வெகுவாகக் குறைந்த காரணத்தால் 19 ரயில்களின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இதற்கிடையே, விமான சேவை, ரயில் சேவை ஆகிய இரண்டிலும் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தில்லி விமான நிலையத்திலும், புது தில்லி ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது. மேலும், அவசர, அவசியம் காரணமாக பயணம் மேற்கொண்டவர்களில் பலர் பெரும் அவதிக்குள்ளாகினர்.
    காற்றின் தரம்: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை மாசு அளவு அதிகரித்ததால், இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு சென்றுள்ளது. காற்றின் தரக் குறியீடு 417 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai