Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

    By DIN  |   Published on : 21st January 2018 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி அரசால் நடத்தப்படும் அரசு மருத்துவமனைகள் அல்லது தன்னாட்சி அமைப்பால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் நோயாளிகள் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது.
    தில்லி அரசின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பாதுகாவலாளிகளை நியமிக்கவும் தில்லி அரசுக்கு உத்தரவிடுமாறு தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
    முன்னாள் செவிலியப் பணியாளர் ஒருவர் வழக்குரைஞர் ராஜேஷ் சர்மா என்பவர் மூலம் தாக்கல் செய்திருந்த இம்மனுவில், "என்னை நோயாளி ஒருவர் பின்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
    மருத்துவமனையில் சிசிடிவி கேமரா நிறுவப்படாததே இதற்கு காரணம். இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க தில்லி அரசு மருத்துவமனைகள், மருந்தகங்கள், இதர சுகாதார நிறுவனங்கள், மொஹல்லா கிளினிக்குகள் ஆகியவற்றில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாதுகாவலாளிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
    தில்லி முதல்வராக உள்ள அரவிந்த் கேஜரிவால் தேர்தலில் போட்டியிட்டபோது பெண்களின் உயிர், உடைமைக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கவும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
    ஆனால், முதல்வரான பிறகு அதைச் செய்யத் தவறிவிட்டார். ஆகவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறையினருக்கு நீதிமன்றம் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்' என்று அதில் கோரப்பட்டிருந்தது.
    இந்த மனுவின் முந்தைய விசாரணையின்போது சம்பந்தப்பட்ட துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    இது தொடர்பான மனு மீதான விசாரணை தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கியஅமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் கூடுதல் வழக்குரைஞர் கௌதம் நாராயண் ஆஜராகி, "தில்லி அரசால் நடத்தப்படும் அரசு மருத்துவமனைகள் அல்லது தன்னாட்சி அமைப்பால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் நோயாளிகள் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவ தகுந்த உத்தரவுகள் தில்லி அரசு மூலம் வழங்கப்பட்டுள்ளது.
    மேலும், தில்லி அரசு மருத்துவனைகளில் பொருத்தப்பட்டு, செயல்படாத நிலையில் சிசிவிடி கேமராக்கள் இருந்தால் அவற்றை பழுதுநீக்குமாறு தில்லி சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் மூலம் மருத்துவமனைகள் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் 2,613 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 2,372 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன.
    சீட்டு பதியுமிடம், மருந்து வழங்குமிடம் பகுதிகளில் பெண்களுக்கு தனிக் கவுன்ட்டர்களும், ஒவ்வொரு மருத்துவமனையிலும் பெண்களுக்கு தனி வார்டுகளும், பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
    மேலும், பரிசோதனை பகுதிகளில் போதிய தடுப்பு திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும் பெண்களுக்கு தனி கழிப்பறைகளும், போதிய விளக்குகள் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai