Enable Javscript for better performance
ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் உதவி: அஜய் மாக்கன் புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் உதவி: அஜய் மாக்கன் புகார்

    By DIN  |   Published on : 21st January 2018 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தில் தொடர்புடைய ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 20 பேரை மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யாமல் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் உதவியுள்ளது என காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
    இது குறித்து கட்சியின் தில்லி பிரதேச தலைவர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய, மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட டிசம்பர் 22-ஆம் தேதிக்கு முன் தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கவில்லை.
    இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் மறைமுகமாக உதவியுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும், கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கும் உள்ள புரிதல் என்ன? தில்லியிலிருந்து 3 மாநிலங்களவை உறுப்பினர்களையும் போட்டியின்றி தேர்வு செய்வதில் சிக்கல் எழக்கூடாது என பாஜக கருதியது.
    இரட்டை பதவியால் எவ்வித ஆதாயமும் பெறவில்லை என ஆம் ஆத்மி கட்சி கூறி வருவதில் உண்மையில்லை. 2015-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் பார்லிமென்ட்ரி செயலர்களுக்கு போக்குவரத்துக்காக அரசு வாகனங்களையும், அலுவலகத்துக்காக அமைச்சர்களின் இடங்களும் வழங்கப்படலாம் என தெரிவித்திருந்தது. 21 பார்லிமென்ட்ரி செயலர்களின் அலுவலகங்களுக்காக ரூ. 13,26,300 ஒதுக்கப்பட்டு, அதில் ரூ. 11,75,828 செலவிடப்பட்டுள்ளது.
    சட்டப்பேரவையின் பலத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே அமைச்சர்களாக நியமிக்க முடியும் என்ற விதியுள்ளது. அப்படி பார்த்தால், 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பலத்தில் 7 பேர் மட்டுமே நியமிக்க வேண்டும். ஆனால், 21 பேருக்கு அமைச்சருக்கு இணையாக அனைத்து வசதிகளையும் அளித்து "சூப்பர் அமைச்சர்களாக' நியமிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்தபோதே அவர்கள் பதவி விலகியிருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சிக்கு திரவ ஆக்ஸிஜன் அளித்து உயிருடன் வைத்திருக்க பாஜக விரும்புகிறது என்றார் அஜய் மாக்கன்.
    இந்த பேட்டியின்போது, தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவரும், கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான ஷர்மிஸ்தா முகர்ஜி, மூத்த தலைவர் சத்தர் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai