Enable Javscript for better performance
இடைத்தேர்தல் குறித்து தில்லி பாஜக ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் செய்துள்ள பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்பதால் அது குறித்து தில்லி பாஜக தீவிர ஆலோசனை நடத்தியது.
    ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்கள் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்த காரணத்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகின.
    இந்நிலையில், அந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டால், தில்லியில் உள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்பதால், இந்த விவகாரம் குறித்து தில்லி பாஜக வெள்ளிக்கிழமை இரவே உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
    இந்தக் கூட்டத்தில் தில்லி பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்று தில்லி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வடக்கு மற்றும் தெற்கு தில்லியில் வணிக கட்டடங்களில் நடைபெற்று வரும் சீலிங் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
    இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதின் மூலம் தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மியின் பலத்தைக் குறைக்க வாய்ப்பாக அமையும் என்று தில்லி பாஜக மூத்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
    2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் இரண்டு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக, ஆம் ஆத்மி தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மேலும், ஆம் ஆத்மி கட்சியில் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அமைச்சர் கபில் மிஸ்ரா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சட்டப்பேரவையில் அக்கட்சிக்கு 65 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai