குர்கிராமில் சிறுமி காரில் கடத்தல்
By DIN | Published on : 21st January 2018 01:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தனது தங்கையுடன் சாலையில் நடந்து சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்கள் 12 வயது சிறுமியைக் கடத்தி சென்ற சம்பவம் குருகிராமில் நடைபெற்றுள்ளது.
கடத்தப்பட்ட சிறுமியைக் கண்டுபிடிக்க காவல் துறையினர் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர்.
ஹரியாணாவில் கடந்த சில தினங்களாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பட்டப் பகலில் நடைபெற்றுள்ள இந்த கடத்தல் சம்பவம் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
குருகிராம் அருகே உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தனது தந்தைக்கு உணவு அளித்துவிட்டு தனது தங்கையுடன் 12 வயது சிறுமி நடைபயணமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்களது அருகே வந்து நின்ற காரில் இருந்தவர்கள் 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்தி சென்றுள்ளனர். அவரது தங்கை வீட்டிற்கு சென்று தெரிவித்த பிறகு, பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்
என்றனர்.