Enable Javscript for better performance
தில்லியில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து:17 பேர் பலி?- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து:17 பேர் பலி?

    By DIN  |   Published on : 21st January 2018 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி, பவானாவில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும், 9 பேர் உயிரிழந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது:
    புற நகர் தில்லி பவானாவில் தொழிற்பேட்டை பகுதியில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வீரர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டன.
    தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தின் கீழ்த் தளத்தில் பட்டாசுத் தொழிற்சாலையும், அதன் இரண்டாவது தளத்தில் ரப்பர் தொழிற்சாலையும் உள்ளன. தரைத்தளத்தில் பற்றிய தீ மேல்தளத்திற்கும் பரவியது. இதையடுத்து, கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீவிபத்தில் 17 பேர் வரை சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
    எனினும், தீவிபத்தில் இதுவரை 9 பேர் வரை இறந்துள்ளதாகவும் தொடர்ந்து தீ பற்றிய பகுதிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தில்லி போலீஸார் தெரிவித்தனர்.
    இது குறித்து வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரி கூறுகையில், "இந்த தொழிற்சாலையானது தில்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஎஸ்ஐஐடிசி) வரம்பின்கீழ் வருகிறது. சம்பவ இடத்திற்கு வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் பிரீத்தி அகர்வால் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகிறார்' என்றார்.
    விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
    இந்த தீ விபத்து தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரை (டுவிட்டர்) வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தில்லி பவானாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்த தில்லிஅரசு உத்தரவிட்டுள்ளது. மீட்ப்புப் பணிகள் குறித்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai