Enable Javscript for better performance
பிற மாநிலங்களின் பார்லிமென்ட்ரி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : ஆம் ஆத்மி கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    பிற மாநிலங்களின் பார்லிமென்ட்ரி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? : ஆம் ஆத்மி கேள்வி

    By DIN  |   Published on : 21st January 2018 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிற மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள பார்லிமென்ட்ரி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
    இதுகுறித்து அக்கட்சியின் தில்லி பிரதேச அமைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் மற்றும் செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    தில்லியில் உள்ள 20 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். 23-ஆம் தேதி ஒய்வு பெறவுள்ள ஏ.கே. ஜோதி இதுபோன்ற பரிந்துரையை ஏன் அளித்தார் என்ற கேள்வி நாட்டு மக்களிடம் எழுகிறது. இது தொடர்பாக ஊடகங்களிலும் விவாதம் நடைபெற்றது வருகிறது.
    இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அனுப்பிய அத்தனை நோட்டீஸுகளுக்கும் ஆம் ஆத்மி சார்பில் உரிய பதில் அவ்வப்போது அளிக்கப்பட்டு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட தரப்பினரின் கருத்துகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட கேட்கப்பட்டது. ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில், குற்றம்சாட்டப்பட்டோரின் கருத்துகளை கேட்காமலே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி அளித்த நோட்டீஸில் அடுத்த விசாரணை குறித்த தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்த நோட்டீஸுக்கு பிறகு தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து விசாரணை குறித்த எவ்வித தகவலும் ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தற்போதுவரை கிடைக்கப்பெறவில்லை.
    ஓய்வுபெறும் இரு நாள்களுக்கு முன், திடீரென்று 20 ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்து அளித்துள்ள பரிசு யாருக்கானது என்பதை தேசம் அறிந்து கொள்ள விரும்புகிறது.
    தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி மீது இதுபோன்ற புகார்கள் வைக்கப்படுவது புதிதல்ல. குஜராத், இமாசல பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பின் போது சர்ச்சை எழுந்தது. குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, முதன்மை செயலாளராக ஏ.கே. ஜோதி நியமிக்கப்பட்டவர். விசுவாசமாக செயல்பட்டதால் அவர் பின்னர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
    ஆனால், தற்போது ஆம் ஆத்மி கட்சியின் 20 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்திருப்பது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் பேராபத்தை உருவாக்கியுள்ளது.
    இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதாயம் பெறவில்லை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு சூழலில், பல்வேறு அரசுகள் பதவியில் இருக்கும்போது இதுபோன்ற பார்லிமென்ட்ரி செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் பஞ்சாப், ஹரியாணா, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், மணிப்பூர், மிசோரம், அருணாசல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் பார்லிமென்ட்ரி செயலாளர்கள் நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவில்லை.
    தில்லியில் பார்லிமென்ட்ரி செயலர்கள் நியமிக்பபட்டபோது, அவர்களுக்காக தனியாக ஊதியம் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படமாட்டாது என தில்லி அரசு அறிவித்தது. இதன்படி, அவர்களுக்கு 1 ரூபாய் கூட அளிக்கவில்லை. அவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பதை பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் நிரூபிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai