Enable Javscript for better performance
கல்லறைகளுக்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கும் வரைவுக் கொள்கை: தில்லி வக்பு வாரியம் தயாரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கல்லறைகளுக்கு ஆண்டு கட்டணம் வசூலிக்கும் வரைவுக் கொள்கை: தில்லி வக்பு வாரியம் தயாரிப்பு

    By DIN  |   Published on : 22nd January 2018 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லறைகளுக்காக 3 முதல் 30 ஆண்டுகள் வரையிலான காலத்தை நிர்ணயிப்பது, கல்லறைகளுக்கான கட்டணமாக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நிர்ணயிப்பது ஆகியவற்றை பரிந்துரைக்கும் வகையிலான ஒரு வரைவு மாதிரி மயானக் கொள்கையை தில்லி வக்பு வாரியம் தயாரித்துள்ளது. 
    தில்லியில் நிலவி வரும் நிலப் பற்றாக்குறை, ஆக்கிரமிப்பு பிரச்னைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த திட்டத்தை தில்லி வக்பு வாரியம் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து தில்லி வக்பு வாரியத்தின் அதிகாரி கூறியதாவது:  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைவு மாதிரி மயானக் கொள்கையில்,  கல்லறை நிலத்தை மறுபயன்பாடு செய்யவும்,  நிரந்தர மயானத்தை அனுமதிக்காத வகையிலும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
    கட்டணத்தின் அடிப்படையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு ஒதுக்கீடு அடிப்படையில் மயானம் அனுமதிக்கப்படும்.
    3 ஆண்டுகளுக்கான காலத்திற்கு கல்லறையை  ஒதுக்கீடு செய்ய ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் விதிக்கப்படும்.  மூன்று ஆண்டுகளுக்கு மேலான காலமாக இருந்தால் முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஒவ்வொரு ஆண்டுக்கும் வருடாந்திர கட்டணமாக ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்படும்.  அதிகபட்சமாக 30 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.  கல்லறை ஒதுக்கீடு பெற்றவர் அல்லது அவரது சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் மேலும் புதைப்பதற்காக அந்த இடத்தை மறுபயன்பாடுக்கு தேர்வு செய்யலாம். 
    எனினும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் இந்த தேர்வை அவர்கள் செய்யலாம்.  இந்த வரைவுக் கொள்கைத் திட்டமானது ஹஜ்ரத் நிஜாமுதீன் தர்கா அருகே உள்ள டிகோனா பார்க் இடுகாட்டின் நிர்வாகத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
    தில்லி வக்பு வாரியத்திடம் உள்ள புள்ளிவிவரத் தகவலின்படி,  தில்லியில்  573 அறிவிக்கை செய்யப்பட்ட  கல்லறை மயானங்கள் உள்ளன. எனினும், 143 கல்லறை மயானங்கள் மட்டுமே புதைப்பதற்கான இடங்களாக உள்ளன.  அவற்றில் பல ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. தில்லியில் உள்ள கல்லறை மயானங்களை நிர்வகிப்பதற்காக எந்தவொரு விதிகளும் அல்லது கொள்கைத் திட்டங்களும் தற்போதுவரை பின்பற்றப்படவில்லை.
    தற்போதைய வரைவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் டிகோனா பார்க் கல்லறை மயானம் ஒரு முன்மாதிரி மயானமாக உருவாகுவது உறுதிப்படுத்தப்படும்.   மேலும், நகரில் உள்ள பிற கல்லறை மயானங்களை சீர்திருத்துவதற்கான ஒரு ஆதார வளமாகவும் செயல்படும்.  மேலும், குறிப்பிட்ட  அம்சங்களைப் பொருத்து பிற கல்லறைகளுக்கு இந்த திட்டத்தை பயன்படுத்தவும் முடியும்.
    இந்த வரைவு மாதிரி கல்லறை மயான கொள்கைத் திட்டத்தை உருவாக்கும்போது புதைக்கும் மத நடைமுறைகளின் விஷயங்களில் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.  சொத்தை நிர்வகிக்க ஒரு வழிமுறையை ஏற்படுத்துவதுதான் இந்த கொள்கையின் அடிப்படை குறிக்கோளாகும்.
    கல்லறை மயானத்தின் நிலத்தில் 60 சதவீதத்தை புதைப்பதற்காக பயன்படுத்துவதற்கு இந்தக் கொள்கை பரிந்துரைக்கிறது.  மீதமுள்ள 30 சதவீதம் நிலமானது பசுமையைப் பேணவும்,  10 சதவீதம் நிலமானது தாற்காலிக கட்டமைப்புகளை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai