Enable Javscript for better performance
"குடியரசுத் தலைவரின் முடிவு வேதனையளிக்கிறது'- Dinamani

சுடச்சுட

    

    தில்லி சட்டப் பேரவையில் இருந்து தங்களை தகுதிநீக்கம் செய்து, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மேற்கொண்ட முடிவு வேதனையளிப்பதாக அந்த நடவடிக்கைக்கு ஆளான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
    ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்த விவகாரத்தில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்யக் கோரி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு, தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தது. இப்பரிந்துரைக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
    இந்நிலையில், குடியரசுத் தலைவரின் முடிவு வேதனையளிப்பதாக தகுதி நீக்கத்துக்கு ஆளானவர்களான அம்கா லம்பா (சாந்தினி சௌக் தொகுதி), மதன் லால் (கஸ்தூர்பா நகர் தொகுதி) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    இதுதொடர்பாக அல்கா லம்பா கூறுகையில், "குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதற்கு முன், எங்களது தரப்பு விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அவர் முடிவெடுத்திருப்பது வேதனையளிக்கிறது' என்றார்.
    மதன் லால் கூறுகையில், "நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்' என்றார்.
    யார் - யார்?: மேற்கண்ட இருவர் தவிர, அனில் பாஜ்பாய்  (காந்தி நகர் தொகுதி),  அவதார் சிங் (கால்காஜி), ஜர்னைல் சிங் (திலக் நகர்),  கைலாஷ் கெலாட் (போக்குவரத்துத் துறை அமைச்சர் - நஜஃப்கர்), மனோஜ் குமார் (கொன்ட்லி),  நரேஷ் யாதவ் (மெஹரூலி),  நிதின்தியாகி (லஷ்மி நகர்),  பிரவீன் குமார் (ஜங்புரா),  ராஜேஷ் குப்தா (வாஜீர்பூர்), ராஜேஷ் ரிஷி  (ஜனக்புரி),  சஞ்சீவ் ஜா (புராரி),  சரீதா சிங் (ரோத்தாஸ் நகர்),  ஆதர்ஷ் சாஸ்திரி (துவாரகா),  சரத் குமார் (நரேலா),  ஷிவ் சரண் கோயல் (மோதி நகர்),  சுக்பிர் சிங் (முன்ட்கா),  சோம் தத்  (சதர் பஜார்),  விரேந்தர் கர்க் (ராஜேந்தர் நகர்) ஆகியோரும் தகுதிநீக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.
    குடியரசுத் தலைவரின் முடிவை, நீதிமன்றமும் உறுதி செய்துவிட்டால், தில்லியில் 20  தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai