Enable Javscript for better performance
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் உ.பி. நபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை: தில்லி நீதிமன்றம் தீர்ப்- Dinamani

சுடச்சுட

    

    சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் உ.பி. நபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை: தில்லி நீதிமன்றம் தீர்ப்பு

    By DIN  |   Published on : 22nd January 2018 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
    இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, "பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை யாரும் தொடுவதற்கு முடியாது.  மேலும், ஆண்களின் பாலியல் வக்கிர, ஒழுக்கமற்ற நடத்தையால் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் துரதிஷ்டவசமான சூழல் உள்ளது' என்றார்.
    இந்த வழக்கு விவரம் வருமாறு: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சவி ராம். இவர்  2014-ஆம் ஆண்டில் வடக்கு தில்லி முகர்ஜி நகரில் கூட்டம் அதிகமுள்ள மார்க்கெட்  பகுதியில் இருந்தார். அப்போது,  அங்கு தனது தாயுடன் பொருள்கள் வாங்க வந்த 9 வயது சிறுமியை தகாத முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதையடுத்து, அக்கம்பக்கம் இருந்தவர்கள், அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக ராம் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு தில்லி கூடுதல் நீதித்துறை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 
    விசாரணையின்போது ஆஜரான சவி ராம், "நான் சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஏதும் ஈடுபடவில்லை.  கூட்டம் அதிகமாக இருந்ததால் நான்தான் சிறுமியிடம் சில்மிஷயத்தில் ஈடுபட்டதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. உண்மையில், அக்குற்றத்தில் ஈடுபட்ட  நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்' என்றார்.
    இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு  கூடுதல் நீதித்துறை அமர்வு நீதிமன்ற நீதிபதி சீமா மைனி அளித்த தீர்ப்பு:
    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சவி ராம்,  சிறுமியிடம் தகாத முறையில் தொட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருப்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.  இதனால், அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.  அத்தொகையில் ரூ.5 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வழங்க வேண்டும். இது தவிர, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தில்லி மாநில சட்ட பணிகள் ஆணையம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.
    எந்த ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை யாரும் தொட முடியாது.  ஆண்களின் பாலியல் வக்கிர, ஒழுக்கமற்ற நடத்தையால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்வது துரதிஷ்டவசமானதாகும்.  பெண்ணின் உடல் அவருக்குச் சொந்தமானது. அதற்கான பிரத்யேக உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது.  மற்றவர்கள் அவரது உடலை அவரது சம்மதம் இல்லாமல் தொடுவது தடுக்கப்பட்டுள்ளது. 
    தொழில்நுட்ப ரீதியில் பலமாகவும், வேகமாக வளர்ந்து வரும் நாடாகவும் உள்ள இந்தியாவில் பெண் குடிமக்கள் அவர்கள் வயதுக்கு வந்தவர்களாக இருந்தாலும் சரி,  சிறிய குழந்தைகளாக இருந்தாலும் சரி தொடர்ந்து ஒழுக்கமற்ற, பாலியல் வக்கிரமிக்க  ஆண்களால்  பாதிக்கப்படும் துரதிஷ்டவசமான சூழல் உள்ளது. 
    பொது இடங்களில் குறிப்பாக திரையரங்குகள் போன்று பொழுதுபோக்கு இடங்கள், மெட்ரோ, பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து, கூட்டம் நிறைந்த சந்தைப் பகுதிகள் போன்றவற்றில் இதுபோன்ற பாலியல் வக்கிரங்களால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்வதாக நீதிபதி வேதனையுடன் குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai