Enable Javscript for better performance
தில்லியின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்களிப்பு: கேஜரிவால் பெருமிதம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியின் வளர்ச்சியில் தமிழர்கள் பங்களிப்பு: கேஜரிவால் பெருமிதம்

    By DIN  |   Published on : 22nd January 2018 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியின் வளர்ச்சியிலும், செயல்பாடுகளிலும் தமிழர்கள் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 
    தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழாவின் நிறைவு நாளான  ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை கார்த்திக் இசைக் குழுவினருடன் திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் வழங்கிய நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    இந்நிகழ்ச்சிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,  ஆர்.கே.புரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்  பரிமளா டோக்காஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
    இந்நிகழ்வில் முதல்வர் கேஜரிவால் பேசியதாவது: 
    வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தில்லி தமிழ்ச் சங்கம் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருவதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். 
    தில்லியில் வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைப்பதற்காகவும்,  கலாசார நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவதற்காகவும் தில்லி தமிழ்ச் சங்கத்துக்குப் பாராட்டுகள். இத்தகைய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்பதில் பெருமையடைகிறேன். 
    தில்லியில் 10 லட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் தில்லியின் வளர்ச்சியிலும், செயல்பாடுகளிலும் பங்காற்றி வருகின்றனர். இன்றைய தில்லியின் தற்போதைய  வளர்ச்சிக்கும் தமிழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். 
    தில்லியில் தமிழர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து தற்போது எனக்கு தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விவாதிக்க என்னுடைய இல்லத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன். தில்லியில் 3 ஆண்டுகளாக நேர்மையான அரசை பார்த்து வருகிறீர்கள். 
    கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நலத் திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
    குறிப்பாக மொஹல்லா கிளினிக் போன்ற சுகாதாரத் திட்டங்கள் உலகின் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. 
    தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பீர்கள் என நம்புகிறேன்.  எத்தனை முறை அழைத்தாலும்,  அத்தனை முறையும் உங்கள் மத்தியில் வருவேன் என்றார் 
    கேஜரிவால். 
    முன்னதாக,  வரவேற்புரை ஆற்றிய சங்கத்தின் பொதுச் செயலர் ரா. முகுந்தன்,  தில்லியில் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி தமிழ் மக்களுக்கு இட ஓதுக்கீடும்,  மாநகராட்சி, சட்ட சபை தேர்தலில் இட ஒதுக்கீடும்,  மாணவர்களுக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடும் வழங்குமாறு முதல்வர் கேஜ்ரிவாலிடம் கோரிக்கை வைத்தார்.
    இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினர்களையும்,  இசைக் கலைஞர்களையும் சங்கத்தின் பொதுச் செயலாளர்  முகுந்தன், இணைச் செயலாளர் பாலமூர்த்தி, பொருளாளர் எம். சத்தியமூர்த்தி, இணைப் பொருளாளர் கே. கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் சாமுண்டீஸ்வரி,  டி. சாந்தி, எஸ். மகேந்திரன்,  எம். சம்பத்குமார்,  எஸ். லட்சுமணன்,  டி. பெரியசாமி,  எம். ஆறுமுகம்,  பி. சங்கர் ஆகியோர் கௌரவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai