Enable Javscript for better performance
பட்டாசு கிடங்கு தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அரசு உறுதி- Dinamani

சுடச்சுட

    

    பட்டாசு கிடங்கு தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அரசு உறுதி

    By DIN  |   Published on : 22nd January 2018 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானா பட்டாசு கிடங்கு தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தில்லி அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. 
    பவானா பகுதியில் உள்ள 2 மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு கிடங்கில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர். டாக்டர்  பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை, தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால்,  சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 
    கடும் நடவடிக்கை: இதைத் தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:  தீ விபத்தில் பலியான 17 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு,  பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தவறு இழைத்தவர்கள் தொழிற்சாலை உரிமையாளராக இருந்தாலும்,  அரசு அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  காயமடைந்த இருவரும் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளனர் என்று தெரிவித்தனர். 
    முதல்வர் உத்தரவு: முன்னதாக,  தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சனிக்கிழமை நள்ளிரவு  பார்வையிட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,  தீ விபத்தில்  காயமடைந்தவர்களையும்,  உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் மருத்துவமனையில்  சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். 
    சிஐடியு வலியுறுத்தல்: தீ விபத்தில் பலியான, காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது. இது குறித்து  சிஐடியு பொது செயலாளர் தபன் சென் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    தீ விபத்துக்கான காரணம் குறித்து அறியவும், இந்த விவகாரத்தில் தொழிலாளர் நலத்துறையின் அதிகாரிகள் பங்கு குறித்து விசாரிக்கவும் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு இழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    பவானா போன்ற புதிய தொழிற்பேட்டையில் செயல்படும் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை போதுமான அளவுக்கு ஆய்வு செய்வதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை.  இதுபோன்ற தீ விபத்துகள் ஆக்ரா, ஃபரீதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்தபோதும்,  பீராகரியில் 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தில் 11 பேர் பலியானபோதும்  மத்திய,  மாநில அரசுகள், தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றின் பங்கு குறித்து விவாதிக்கப்படவில்லை என்றார் அவர்.
    உரிமையாளருக்கு நீதிமன்ற காவல்: இதனிடையே,  தீ விபத்து சம்பவத்தில் கைதான பட்டாசு கிடங்கின் உரிமையாளர் மனோஜ் ஜெயினுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல் விதித்து ரோஹிணி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.  தீ விபத்து தொடர்பாக தில்லி காவல்துறை பதிந்துள்ள வழக்கு விசாரணை  குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

     


    நீதி விசாரணை வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
    தீ விபத்து ஏற்பட்ட பகுதியை தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    தீ விபத்து தொடர்பாக வடக்கு தில்லி மாநகராட்சியிடம் விசாரணை நடத்த வேண்டும். தொழிற்சாலை உரிமம் தொடர்பாக  வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால்  தெரிவித்தது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். 
    இங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் உரையாடினோம்.  இதுபோன்ற தொழிற்சாலைகளில் பணி நேரத்தின்போது பிரதான கதவுகள் அடைக்கப்படுவதாகவும்,  தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
    இதுபோன்று வெளியில் வெளிக் கதவுகள் அடைக்கப்பட்டதால்தான், தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமானது.  
    விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் ஆலை செயல்பட்டுள்ளது.  இந்த  தீ விபத்து தொடர்பாக தில்லி அரசின் துறைகள், தில்லி மாநகராட்சியின் துறைகள் மீது நீதி விசாரணை நடைபெற வேண்டும்.  காங்கிரஸ் ஆட்சியில் பவானா மருத்துவமனையில் அவசர சிகிச்சை செயல்பட்டு வந்தது.  தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வளவுப் பெரிய தொழிற்பேட்டை அமைந்துள்ள பவானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்பட வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai