Enable Javscript for better performance
ஆயுத விநியோகம்: 3 பேர் கைது; 5 துப்பாக்கிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி, என்சிஆர் பகுதிகளில் துப்பாக்கிகள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர், அவரிடம் துப்பாக்கிகள் வாங்கிய இருவர் என 3 பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 துப்பாக்கிள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தில்லி துவாரகா மாவட்ட காவல் துணை ஆணையர் ஷிபேஷ் சிங் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
    துவாரகா பகுதியில் கிரிமினல்கள் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்ட சில சம்பவங்கள் நிகழ்ந்தன. தில்லி நஜஃப்கர் மற்றும் என்சிஆர் பகுதிகளில் உள்ள கிரிமினல் கும்பல்களுக்கு இதுபோன்ற சட்டவிரோத ஆயுதங்களை சிலர் சப்ளை செய்து வருவதாக துவாரகா ஆயுதத் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்தக் கும்பலைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
    இந்நிலையில், ஜனவரி 16-ஆம் தேதி ஒரு ரகசிய தகவல் போலீஸாருக்கு வந்தது. அதில் கஜேந்தர் (எ) கஜ்ஜா என்பவர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்களை வாங்கி சப்ளை செய்து வருவதாகவும், அவர் நஜஃப்கர் - உத்தம் நகர் ரோடு பகுதியில் உள்ள மெட்ரோ பில்லர் அருகே வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    இதையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜ் குமார் தலைமையிலான போலீஸார் அங்கு மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இரவில் அங்கு வந்த கஜேந்தர் (25) கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த பையில் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல்  செய்யப்பட்டன. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
     அப்போது, அவரிடம் ஆயுதங்களைப் பெற்ற ரனோலா, ஷிவ் விஹார் பகுதியைச் சேர்ந்த முகம்மது சாஜித், விகாஷ்புரியைச் சேர்ந்த உமர் (எ) அஸ்லம் கான் ஆகியோர் குறித்த தகவல் கிடைத்தது. 
    இருவரும் ரனோலாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், நான்கு தோட்டாக்கள் மீட்கப்பட்டன. 
    உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்த கஜேந்தர், மதுராவில் இருந்து துப்பாக்கிகளை வாங்கி வந்து தில்லி, என்சிஆர் பகுதிகளில் விற்று வந்தார்.
    உமர், முகம்மது சாஜித்திற்கும் துப்பாக்கிள் சப்ளை செய்தார். உமரும், முகம்மது சாஜித்தும் ஒரு மதுபானக் கடையில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் உயர் அதிகாரி ஷிபேஷ் சிங் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai