Enable Javscript for better performance
கேஜரிவால் பதவி விலக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி தில்லி பிரதேச காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த ஆர்ப்பாட்டதில் தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் பேசியதாவது:
    ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எளிமையாக இருப்பார்கள், ஊழலுக்கு எதிராக போராடுவார்கள் என முதல்வர் கேஜரிவால் கூறினார். ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில்  சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் 400 சதவீதம் உயர்த்தப்பட்டது.  
    ஊழல் புகாரில் தொடர்புடைய பாதிக்கும் மேற்பட்ட  அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 
    இத்துடன் நிற்காமல் 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பார்லிமென்ட்ரி செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். 
    ஆதாயம் தரும் இரட்டை பதவியை வகித்தததால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். 
    இந்த பரிந்துரையை ஏன் மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை?  
    ஆம் ஆத்மி கட்சி சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்ய வசதி செய்துவிட்டு, அவசர கதியில் தகுதி நீக்கம் செய்ய ஏன் தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்?   
    இந்த விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகச் செய்யும் போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது' என்றார் அஜய் மாக்கன்.
    தில்லி பிரதேச காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள தீன தயாள் உபாத்யாய மார்கிலிருந்து தில்லி தலைமைச் செயலகம் நோக்கி  புறப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை தில்லி காவல்துறையினர் ஐடிஓ சந்திப்பில் தடுத்து நிறுத்தினர்.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷர்மிஸ்தா முகர்ஜி,  முன்னாள் எம்பிக்கள் சஜ்ஜன் குமார், மகாபல் மிஸ்ரா, ரமேஷ் குமார், கட்சியின் பிரதேச தலைவர் சுபாஷ் சோப்ரா, முன்னாள் அமைச்சர் நரேந்திர குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai