Enable Javscript for better performance
ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு தடை விவகாரம்: மத்திய அரசு, தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

  

  ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு தடை விவகாரம்: மத்திய அரசு, தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ்

  By DIN  |   Published on : 23rd January 2018 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசின் உள்துறை செயலர், தில்லி காவல்துறை ஆணையர், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைவர் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அளித்தது.
  தில்லியின் மையப் பகுதியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. 
  அதில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவோரை தடுத்து நிறுத்தி, அவர்களை அஜ்மீரி கேட் பகுதியில் உள்ள ராம் லீலா மைதானத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தில்லி அரசுக்கும், புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கும், தில்லி காவல்துறை ஆணையருக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
  பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தேசிய - தென்னிந்திய நிதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணுவும், மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. 
  அதில், "ஜந்தர் மந்தரில் 1993-ஆம் ஆண்டு முதல் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், போராட்டங்களுக்கு ஒட்டு மொத்தமாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. 
  இந்த தடை அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது. போராட்டங்களை வெகு தொலைவில் நடத்தவும் தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு வெகு தொலைவில் போராட்டங்கள் நடத்தப்பட்டால் போராட்டத்தின் நோக்கம் நீர்த்துப் போகச் செய்துவிடும். 
  எனவே, ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். அமைதி வழியிலான பொதுக் கூட்டம், தர்னா உள்ளிட்டவற்றை தலைநகர் தில்லியில் பல்வேறு பகுதிகளில் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிகளை உருவாக்க வேண்டும்' என அம்மனுவில் கோரப்பட்டிருந்தது. 
  இந்தமனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, "ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தில்லி காவல் துறையால் அடிக்கடி தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது தன்னிச்சையானதும், நியாயத்துக்குப் புறம்பானதாகும். அரசியலமைப்புச் சட்டம் 19(1) பிரிவானது அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு உரிமை அளிக்கிறது. 
  ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த இந்த உரிமை மிக அவசியமாகிறது. இதேபோல, அமைதியாக கூடி தர்னா, போராட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவதும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையின் ஓர் அம்சமாகும்' என்று வாதிட்டார். 
  இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், " குடிமக்களின் போராடும் உரிமையை பாதுகாக்கும்நேரத்தில், போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பாடமல் இருக்க வேண்டும். போராடும் உரிமை தொடர்பாக விதிமுறைகள் வகுப்பது அவசியம்' எனத் தெரிவித்தனர். 
  இத்துடன், ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தில்லி காவல் ஆணையர், என்டிஎம்சி தலைவர், மத்திய உள்துறை செயலர், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செயலர், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகிவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai