Enable Javscript for better performance
தகுதி நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர்: புதிய மனுக்களை தாக்கல் செய்ய ம- Dinamani

சுடச்சுட

    

    தகுதி நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர்: புதிய மனுக்களை தாக்கல் செய்ய முடிவு

    By DIN  |   Published on : 23rd January 2018 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் ஆணையத்தின் தகுதி நீக்க பரிந்துரைக்கு எதிராக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனர். இந்த விவகாரத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ய இருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
    இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பாலி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவரின் சார்பில் வழக்குரைஞர் மணீஷ் வஷிஸ்டி ஆஜராகி, "ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்' என்று தெரிவித்தார்.
    இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ள நீதிபதி ரேகா பாலி அனுமதித்தார். இதையடுத்து, மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்ட 20 எம்எல்ஏக்கள், இந்த விவகாரம் தொடர்பாக புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
    பின்னணி: தில்லி அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் வகையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரை, பார்லிமென்டரி செயலர்களாக நியமித்து, தில்லி அரசு கடந்த  2015, மார்ச்சில்  உத்தரவு பிறப்பித்தது.
    ஆனால், அந்த 21 பேரும் ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. 
    பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரஜௌரி கார்டன் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், பார்லிமென்டரி செயலராக இருந்த அவருக்கு எதிரான நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் கைவிட்டது. மீதமுள்ள 20 எம்எல்ஏக்கள் மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடர்ந்தது.
    இந்த விவகாரத்தில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்யும் பரிந்துரையை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அளித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
    இதையடுத்து, அல்கா லம்பா (சந்தினி சௌக்), அனில் பாஜ்பாய் (காந்தி நகர்), அவதார் சிங் (கால்காஜி), ஜைர்னைல் சிங் (திலக் நகர்), கைலாஷ் கெலாட் (போக்குவரத்துத் துறை அமைச்சர்) - நஜஃப்கர், மதன் லால்  (கஸ்தூர்பா நகர்), மனோஜ் குமார் (கொன்ட்லி), நரேஷ் யாதவ் (மெஹரூலி), நிதின்தியாகி (லஷ்மி நகர்), பிரவீன் குமார் (ஜங்புரா), ராஜேஷ் குப்தா (வாஜீர்பூர்),  ராஜேஷ் ரிஷி  (ஜனக்புரி), சஞ்சீவ் ஜா (புராரி), சரீதா சிங் (ரோத்தாஸ் நகர்), ஆதர்ஷ் சாஸ்திரி (துவாரகா), சரத் குமார் (நரேலா), ஷிவ் சரண் கோயல் (மோதி நகர்), சுக்பிர் சிங் (முன்ட்கா), சோம் தத்  (சதர் பஜார்), விரேந்தர் கர்க் (ராஜேந்தர் நகர்) ஆகியோர் எம்எல்ஏக்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai