Enable Javscript for better performance
பாஜகவின் தரம்தாழ்ந்த அரசியலால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    பாஜகவின் தரம்தாழ்ந்த அரசியலால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 23rd January 2018 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜகவின் தரம்தாழ்ந்த அரசியலால் ஆம் ஆத்மி எம்எல்ஏகள் 20 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை தில்லி மக்களுக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
    ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளை வகித்த விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, தில்லி சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி உறுப்பினர்களில் 20 பேர் தகுதி நீக்கத்துக்கு ஆளாகினர். 
    இந்த தகுதி நீக்கம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கை என்றும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது. 
    இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல் உள்ளதாகவும், இடைத் தேர்தலை காரணமாகக் காட்டி தில்லியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முடக்க பாஜக அரசு தீட்டிய சதித் திட்டமே எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு காரணம் என்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை தில்லி மக்களுக்கு தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பகிரங்க கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். 
    அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 
    முதல்வர் கேஜரிவாலின் புகழ் நாடு முழுவதும் பரவி வருவதைக் கண்டு மத்திய அரசு பயப்படுகிறது. ஆம் ஆத்மி அரசு தில்லியில் முழு வீச்சாக மேற்கொண்டு வருகின்ற மேம்பாட்டுப் பணிகளை, இடைத்தேர்தலைக் காரணம் காட்டி நிறுத்துவதற்காகவே ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைத்தேர்தலால் தில்லியின் மேம்பாட்டுப் பணிகள் முற்றாக முடங்கி, மக்கள் பாதிக்கப்படுவர்.
    இத்தேர்தலால் மக்களின் வரிப்பணம் வீணாகும். அடுத்தடுத்து வரும் தேர்தல்களால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தில்லியில் எவ்விதமான மேம்பாட்டுப் பணிகளையும் செய்ய முடியாத நிலை உருவாகும். 
    பார்லிமென்ட் செயலர்களாக நியமிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அதற்கான சம்பளம், வாகன வசதிகளைப் பெறவில்லை. தங்களின் சொந்தப் பணத்தைச் செலவு செய்தே பார்லிமென்ட் செயலர்களாக அவர்கள் பணியாற்றி வந்தனர். தரம்தாழ்ந்த அரசியல் செய்யும் பாஜகவுக்கு தில்லி மக்கள் இனி வரும் தேர்தல்களில் சரியானன பாடம் புகட்ட வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai