Enable Javscript for better performance
மெட்ரோ ரயில் நிலையத்தில் 20 தோட்டாக்களுடன் நுழைந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    மெட்ரோ ரயில் நிலையத்தில் 20 தோட்டாக்களுடன் நுழைந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை

    By DIN  |   Published on : 23rd January 2018 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் 20  துப்பாக்கித் தோட்டாக்களுடன் நுழைந்த பெண்,  அவருடன் வந்த குடும்பத்தினர் ஆகியோரிடம் தில்லி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தில்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அவர்கள் மெட்ரோ ரயில்வே வளாகப் பகுதிகளிலும், தண்டவாளப் பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 
    வரும் 26-ஆம் தேதி தில்லியில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்களது உடைமைகள் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகிறது.
    இந்நிலையில்,  தில்லி ஆதர்ஷ் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, பயணிகள் சோதனைப் பிரிவில் பெண் பயணி ஒருவரின் உடைமை ஸ்கேன் இயந்திரத்தில் சோதிக்கப்பட்டது. அதில் 20 துப்பாக்கித் தோட்டாக்கள் இருப்பது தெரியவந்தது. 
    இதையடுத்து,  அப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தனது  தந்தை,  குடும்பத்தினருடன் வந்திருப்பதாக கூறினார். 
    இதையடுத்து, அவரது தந்தை உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.  அப்போது,  அப்பெண்ணின் தந்தை தன்னிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருப்பதாக கூறி அதற்கான நகலை போலீஸாரிடம் காண்பித்தார். 
    மேலும், அந்த தோட்டாக்கள் அனைத்தும் தன்னுடையது எனக் கூறினார்.  இதையடுத்து,  சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரது குடும்பத்தினரும் விசாரணைக்காக தில்லி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிஐஎஸ்எஃப் போலீஸார் தெரிவித்தனர்.
    தில்லியில் குடியரசுத் தின கொண்டாட்ட நிகழ்வை ஒட்டி பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பும்,  கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  
    இந்தியா கேட்  உள்ளிட்ட அணிவகுப்பு நடைபெறும் சாலைகளில் போலீஸார் 24 மணிநேரமும் துப்பாக்கியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  தில்லி மாநகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai