Enable Javscript for better performance
தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்கள் விரைவில் நியமனம்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்கள் விரைவில் நியமனம்!

    By DIN  |   Published on : 24th January 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி பல்கலைக்கழகத்தின் முக்கியமான கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்கள் மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக தில்லி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
    தில்லி பல்கலைக்கழகத்தின் 64 கல்லூரிகளில் 27 கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படாமல், பொறுப்பு முதல்வர்களே பதவியில் உள்ளனர். இக் கல்லூரிகளில் நிரந்தர முதல்வர்கள் இல்லாததால் கல்லூரிப் பணிகளை முழு வீச்சுடன் மேற்கொள்ள முடியவில்லை. இதனால், கல்லூரி வளர்ச்சிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
    இந்நிலையில், இக் கல்லூரிகளுக்கான முதல்வர்களை நியமிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இக் கல்லூரி முதல்வர்கள் அவர்களின் கல்விப் பணி, ஆய்வுப் பணி, மக்கள் பணி போன்ற பல விஷயங்களைக் கருத்தில்கொண்டு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். முதல்வர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணும் வகையில், நியமனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் இணையத்தில் வெளியிடப்படவுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
    மேலும், பெரும்பாலான கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனத்திற்கான உத்தேச பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக தில்லி ஹிந்து கல்லூரி வட்டாரங்கள் கூறியதாவது: 
    முதல்வர் பதவிக்காக 25 பேரின் பெயர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 10 பேர்களின் பெயர்கள் இறுதிப்பட்டியலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கல்லூரி முதல்வராக மிக விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
    மேலும் சில கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனத்திற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ராமா ஷர்மா கூறுகையில், "நிரந்தர முதல்வரைத் தேர்ந்தெடுக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மிக விரைவில் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும்' என்றார். 
    இந்நிலையில், இதுவரை முதல்வர் தேர்வுக்கான நேர்காணல் பணிகளை தொடங்காத ஜானகி தேவி நினைவு கல்லூரி,  ராம்லால் ஆனந்த் கல்லூரி போன்றவை விரைவில் முதல்வர் தேர்வுக்கான நேர்காணலை தொடங்கவுள்ளதாக அக்கல்லூரிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. 
    தில்லி ஹிந்து கல்லூரி, தேஷபந்து கல்லூரி, ஹன்ஸ்ராஜ் கல்லூரி, கிரோரி மால் கல்லூரி, மோதிலால் நேரு கல்லூரி உள்பட தில்லி பல்கலைக்கழகத்தின் முக்கியமான பல கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படாமல் அந்தப் பதவி பல ஆண்டுகளாக காலியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai