1 சதவீதம் பேரிடம் 73 சதவீத சொத்துகள்: மோடி விளக்கமளிக்க ராகுல் வலியுறுத்தல்
By DIN | Published on : 24th January 2018 01:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
"நாட்டிலுள்ள 73 சதவீத சொத்துகள், ஒரு சதவீத இந்தியர்களிடம் மட்டுமே குவிந்திருப்பது எப்படி?' என்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.
இந்திய மக்களின் வருவாய் தொடர்பான ஆய்வறிக்கையை "ஆக்ஸ்ஃபேம்' என்ற ஆய்வு நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், "இந்தியாவில் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட மொத்த வருவாயில் 73 சதவீதத்தை, செல்வந்தர்களாக இருக்கும் ஒரு சதவீதம் பேர், தங்கள் வசம் வைத்துக் கொண்டுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 67 சதவீதம் பேரின் வருவாய், 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்; இதற்காக, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிலாளர் துறையை மேம்படுத்த வேண்டும். விவசாயத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் செவ்வாய்க்கிழமை உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "நாட்டிலுள்ள 73 சதவீத சொத்துகள், ஒரு சதவீத இந்தியர்களிடம் மட்டுமே குவிந்திருப்பது எப்படி?' என்பது குறித்து, டாவோஸில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும். அவர் மேற்கோள் காட்டி பேசுவதற்காக, "ஆக்ஸ்ஃபேம்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையையும் இப்பதிவில் இணைத்துள்ளேன்' என்று கிண்டலாக குறிப்பிட்டார்.
பாஜக பதிலடி: இதனிடையே, இந்த விவகாரத்தில் ராகுலுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் நேரு காலத்திலிருந்து காங்கிரஸ் ஆட்சியின் மோசமான நிர்வாகத்தால் ஏற்பட்ட விளைவுதான், தற்போதைய நிலைக்கு காரணம்.
கடந்த மூன்றரை ஆண்டு கால மோடியின் ஆட்சியில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிகான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஜன் தன் யோஜனா, உஜ்ஜவாலா யோஜனா உள்ளிட்ட திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.