Enable Javscript for better performance
காவல் நிலையங்களில் ஏழைகளால் வழக்குப் பதிவு செய்ய முடிவதில்லை: தில்லி உயர் நீதிமன்றம் வேதனை- Dinamani

சுடச்சுட

    

    காவல் நிலையங்களில் ஏழைகளால் வழக்குப் பதிவு செய்ய முடிவதில்லை: தில்லி உயர் நீதிமன்றம் வேதனை

    By DIN  |   Published on : 25th January 2018 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாமனார் வீட்டிலிருந்துதன் மகள் காணாமல் போனதாக தாய் அளித்த புகார் மனு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருந்த தில்லி காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த தில்லி உயர் நீதிமன்றம், காவல் நிலையங்களில் ஏழைகளால் வழக்குப் பதிவு செய்ய முடியவில்லை என்று வேதனை தெரிவித்தது.
    இதுகுறித்த வழக்கு விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்திற்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார். 
    அதில், "எனது மகள், மாமனார் வீட்டில் இருந்து 2006-ஆம் ஆண்டில் காணாமல் போனார். அவர் பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை. அவர் மாமனார் வீட்டாரால் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். 
    மேலும், வரதட்சிணை குறைவாக வாங்கி வந்ததாகவும் மாமனார் வீட்டினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டார். 
    இந்த விவகாரம் தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆகவே, நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு போலீஸாருக்கு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
    இந்த புகார் கடிதத்தை தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கி அமர்வு, மனுவாக ஏற்றுக் கொண்டு விசாரித்தது. 
    அப்போது, புகார் கடிதம் மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதியாமல் இருப்பதற்கு நீதிபதிகள் அதிருப்தியும், வேதனையும் வெளியிட்டனர். "ஒரு பெண் புகார் மனு அளித்தும் அதன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. 
    காவல் நிலையங்களில் ஏழைகள் வழக்குப் பதிவு செய்வது என்பது இயலாததாக உள்ளது' என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், பெண் அளித்த புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து பதில் அளிக்குமாறு தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
    மேலும், சம்பந்தப்பட்ட பெண் வசிக்கும் சரகத்தைச் சேர்ந்த காவல் துணை ஆணையர் இந்த புகார் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், காணாமல் போன பெண்ணையும், அவரது கணவரையும், அடுத்த விசாரணை நடைபெறும் ஜனவரி 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை உறுதிப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai