Enable Javscript for better performance
போபால் தமிழ்ச் சங்கம் சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    போபால் தமிழ்ச் சங்கம் சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா

    By DIN  |   Published on : 25th January 2018 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள போபால் தமிழ்ச் சங்கம் சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன்கூடிய பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
    போபால், கோவிந்த்புராவில் உள்ள கரீயர் கல்லூரி கலையரங்கில் தில்லி கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து போபால் தமிழ்ச் சங்கம்நடத்திய பொங்கல் விழாவுக்கு தலைமை விருந்தினராக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் இல. கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் போபால் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ராஜீ தொடக்கவுரையாற்றினார்.
    தில்லி கலை இலக்கியப் பேரவையின் சார்பில் ப. அறிவழகன் நடுவராக பங்கேற்ற "மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பெரிதும் துணை நிற்பது சொத்து சுகமா? சொந்த பந்தமா? ' என்ற தலைப்பில் இன்னிசை சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. 
    இதில் "சொத்தே' எனும் அணியில் பி. ராகவன் நாயுடு, ஜோதி பெருமாள், கவிதா ரமேஷ், குடியாத்தம் சுகன்யா ஆகியோர் வாதிட்டனர். "சொந்த பந்தமே' எனும் அணியில் சத்யா அசோகன், வெங்கட், அபினயா கண்ணன், கோவை தமிழரசன் ஆகியோர் வாதிட்டனர். இறுதியில் "மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சொத்து அவசியமே என்றாலும், சொந்த பந்தங்களுடன் அனுபவித்தால்தான் வாழ்க்கையே மகிழ்ச்சியாக இருக்கும்' என்று நடுவர் ப.அறிவழகன் தீர்ப்பு வழங்கினார்.  யூ.கே. முரளியின் இன்னிசையுடன் பட்டிமன்றம் நடைபெற்றது. வரகவி நரசிம்மனின் பாடலுடன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 
    தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் கே.வி.கே. பெருமாளின் அறிமுக உரையை பா.குமார் வாசித்தார். தில்லியைச் சேர்ந்த சரோஜா வைத்தியநாதனின் மாணவியர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. தவிர, போபாலை சேர்ந்த தமிழ்க் குழந்தைகளின் நடனம், பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
    இவ்விழாவில் டாக்டர் சரோஜா வைத்தியநாதன், டாக்டர் ரா. சசிகுமார், எம். எஸ். ரவி, பா.குமார், ஜகதீசன்ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜெயபாஸ்கர ரவி, இணைச்செயலர் ரமாமணி சுந்தர் உள்பட பலர் பங்கேற்றனர். போபால் தமிழ்ச் சங்கத்தின் செயலர் சாமித்துரை நன்றி கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai