Enable Javscript for better performance
இடிஎம்சியின் திருத்தப்பட்ட நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்: மலிவு விலை உணவகம் திறக்க ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    இடிஎம்சியின் திருத்தப்பட்ட நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்: மலிவு விலை உணவகம் திறக்க ஏற்பாடு

    By DIN  |   Published on : 26th January 2018 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்கு தில்லி மாநகராட்சியின் (இடிஎம்சி) 2017-18ஆம் நிதியாண்டின் திருத்தப்பட்ட  நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை,  2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதி நிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
    கிழக்கு தில்லி மாநகராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் ப்ரிவிஷ் சர்மா மேற்கண்ட இரு அறிக்கைகளையும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கைகளில்  கூறப்பட்டுள்ளதாவது:
    கல்வி வரி,  தொழில் வரி, முன்னேற்ற வரி  உள்பட எவ்வித வரிகளும் அதிகரிக்கப்படாது. குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவுக் கூடங்கள் திறந்துவைக்கப்படும். பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு எதிராக விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும். தாகிர்பூரில் நவீன வசதிகளுடன்கூடிய பூங்கா அமைக்கப்படும்.  கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள நான்கு மேம்பாலங்கள் அழகுபடுத்தப்படும். 
    கழிப்பறை இல்லாத பகுதிகளில் புதிய கழிப்பறைகள் உருவாக்கப்படும். பொது இடங்களில் மலம், ஜலம் கழிப்பதற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இதற்காக 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்வர்.
    தூய்மை இந்தியா தரப் பட்டியலில் இடம்பெறுவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்படும்.  மாநகராட்சியின் சார்பில் 80 பொதுக் கழிப்பிடங்கள் உருவாக்கப்படவுள்ளன.   
    மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். மின்சாரத்தை சேமிக்கும் வகையில் மாநகராட்சிப் பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படும். 
    ரூ. 2 கோடி செலவில் 15 மாநகராட்சிப் பள்ளிகளில்  சி.சி.டி.வி. கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும். மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்படும்.   
    மாநகராட்சிக்கு தனியாக செயலி உருவாக்கப்படும். கிருஷ்ணா நகரில் கட்டப்பட்டு வரும் கார் பார்கிங்  ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படும். 
    சுவாமி தயானந்த் மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படும். 
    கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில் தனி ஆய்வகம் உருவாக்கப்படும்.  மாநகராட்சியின் 16,000 துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai