Enable Javscript for better performance
ஜனநாயக மாண்புகளை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும்: குடியரசு தின விழாவில் கேஜரிவால்- Dinamani

சுடச்சுட

    

    ஜனநாயக மாண்புகளை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும்: குடியரசு தின விழாவில் கேஜரிவால் உரை

    By DIN  |   Published on : 26th January 2018 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜனநாயக மாண்புகளை சீர்குலைக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக போராடி நாட்டைக் காக்க  வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார். 
    தில்லி அரசு சார்பில் 69- ஆவது குடியரசு தின விழா சத்ரசால் விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தில்லி காவல் துறை,  தில்லி தீயணைப்புத் துறை,  சிவில் பாதுகாப்பு,  தேசிய மாணவர் படை,  பள்ளிக் குழந்தைகள் ஆகியோரின்  அணிவகுப்பு மரியாதையை தில்லி முதல்வர் ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் பேசியதாவது:
    தில்லிவாசிகளுக்கும், நாட்டு மக்களுக்கும், உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கும் குடியரசு தின விழா வாழ்த்துகள்.  1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அமலுக்கு வந்த சிறப்புவாய்ந்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தை  பி.ஆர். அம்பேத்கர் நாட்டுக்கு வழங்கினார்.  இது உலகில் சிறந்த ஒரு அரசியலமைப்பு சட்டமாக கருதப்படுகிறது. நாட்டின் குடியரசு,  ஜனநாயக மாண்புகளை சீர்குலைக்கும் பிரிவினைவாத சக்திகளிடமிருந்து நாட்டை காக்க வேண்டும். 
    அரசிலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை தில்லியில் உள்ள அனைத்து குழந்தைகளும் அறியும் வகையிலும், சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம்,  வலிமைமிக்க நாட்டை உருவாக்குதல் தொடர்பாகவும் அரசு மற்றும் தனியார்  பள்ளிகளைச் சேர்ந்த 40 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வைக்கப்படுகின்றனர். இதன் வாயிலாக பள்ளி பருவத்திலேயே தேசப் பக்தி உணர்வு ஊட்டப்படுகிறது. தில்லியில் பள்ளிகளில் பாடத் திட்டத்தின் சுமை பாதியளவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குருகிராமில் பள்ளி வாகனத்தின் மீது சமுக விரோதிகள் கல்லெறிந்த சம்பவம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
    தில்லியில் நிலத்தடி நீரின் அளவு நாளுக்குள் நாள் குறைந்து நம்மை அச்சமூட்டி வருகிறது.  நாள்தோறும் நமது பயன்பாட்டுக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அண்டைய மாநிலங்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க வேண்டும். 
    இதுபோன்ற  நீர் சேமிப்புக்காக  ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இந்த ஆலைகளில் பெறப்படும் நீர் பூங்கா, தோட்டக்கலை ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும். 
    மேலும், நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் மழை நீர் சேமிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் தில்லியின் மாநிலம் நீர்த்தேவையில் தன்னிறைவு அடையும். சீலிங் நடவடிக்கைகளில் இருந்து வணிகர்களை காக்க தில்லி மாஸ்டர் பிளானில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும்  என்றார் கேஜரிவால். 
    குடியரசு தின விழாவையொட்டி,  பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த விழாவில்,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா,  சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கோபால் ராய்,  சுற்றுசூழல் அமைச்சர் இம்ரான் ஹுசைன்,  சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்தர் பால் கெளதம்,  தில்லி தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ்,  முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், துறைகளின் தலைவர்கள், தில்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai