தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் காயம்
By DIN | Published on : 26th January 2018 12:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி முன்ட்கா பகுதியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைக்கும் வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறையினர் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி முன்ட்கா பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக வியாழக்கிழமை காலை 9.25 மணிக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 30 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த தீயானது பழையபொருள் விற்பனை கடை, காலணி கிடங்கு மற்றும் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீயணைப்பு வீரர்கள் மணீஷ், ரன்பீர் ஆகியோர் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 20-ஆம் தேதி மாலை பவானா பகுதியில் ஒரு பட்டாசு ஆலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பெண்கள் உள்பட 17 பேர் இறந்தனர். விபத்தில் இறந்தவர்களுக்கு தில்லி அரசு சார்பில் கருணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆலை உரிமையாளர் மனோஜ் ஜெயின் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.