Enable Javscript for better performance
பள்ளி வாகனம் மீது தாக்குதல்: முதல்வர் கேஜரிவால் கண்டனம்- Dinamani

சுடச்சுட

  

  பள்ளி வாகனம் மீது தாக்குதல்: முதல்வர் கேஜரிவால் கண்டனம்

  By DIN  |   Published on : 26th January 2018 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சர்ச்சைக்குரிய "பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, குருகிராமில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பள்ளி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு, தில்லி முதல்வர் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள "பத்மாவத்' திரைப்படத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி  பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
  பல்வேறு தடைகளுக்கு பின், அந்த திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. இதையடுத்து, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில், ராஜ புத்திர அமைப்புகள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. வாகனங்களுக்கு தீ வைப்பு, கல் வீச்சு ஆகிய வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 
  பள்ளி வாகனம் மீது தாக்குதல்: குருகிராமில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, 25 குழந்தைகளுடன் சென்றுக் கொண்டிருந்த தனியார் பள்ளியின் வாகனம் மீது கற்கள், கம்புகளை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். 
  இதில், பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதால், குழந்தைகள் அச்சமடைந்து அலறினர். எனினும், அனைத்துக் குழந்தைகளையும் கீழே படுக்கச் செய்த பேருந்தின் ஓட்டுநர், அப்பகுதியில் இருந்து வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார். அதிர்ஷ்டவசமாக எந்த குழந்தைக்கும் காயம் ஏற்படவில்லை.
  18 பேர் கைது: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த குருகிராம் காவல்துறையினர், 18 பேரை கைது செய்துள்ளனர்.
  பள்ளிகளுக்கு விடுமுறை: தனியார் பள்ளி வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக, குருகிராமில் உள்ள பிரபல பள்ளிகள், ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவித்துள்ளன.
  இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகங்கள் கூறுகையில், "குருகிராமில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும், போராட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டு, பள்ளி வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய நாங்கள் விரும்பவில்லை' என்று தெரிவித்தன.   
  கேஜரிவால் கண்டனம்: இந்நிலையில், பள்ளி வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, முதல்வர் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற கேஜரிவால், இதுதொடர்பாக  பேசியதாவது:
  ஜாதி, மத அடிப்படையில் மக்கள் மத்தியில்  பிரிவினையை ஏற்படுத்த முயலும் சக்திகளுக்கு எதிராக நாம் இனியும் மௌனமாக இருக்கக் கூடாது. 
  முஸ்லிம்கள், தலித்துகளுக்கு எதிராக கொடூரத் தாக்குதல் நடத்தும் கும்பலினர், இப்போது நமது குழந்தைகளையும் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.
  பள்ளி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது வெட்கக்கேடானது; இச்செயலில் ஈடுபட்டவர்கள்  கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். கடவுள் ராமர், ராவணனுக்கு அளித்த தண்டனையைவிட கடுமையான தண்டனையை, அந்த நபர்களுக்கு வழங்க வேண்டும்.
  ராமர், கிருஷ்ணர், கௌதம புத்தர், மகாவீரர், குரு நானக், கபீர் ஆகியோர் தோன்றிய புண்ணிய பூமி இது. முகமது நபி மற்றும் இயேசு கிறிஸ்துவை துதிப்போரும் வாழும் இந்த நாட்டில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இடமில்லை. குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை எந்த மதமும் ஆதரிப்பதில்லை.
  குடியரசு தின விழாவில் மிகவும் கனத்த இதயத்தோடு இந்த விவகாரத்தை நான் எழுப்பியுள்ளேன். எனது நாட்டை நான் நேசிக்கிறேன். நமது நாட்டு மக்கள், அமைதியையும் அன்பையுமே விரும்புகின்றனர். இங்கு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்றார் கேஜரிவால்.

  "பெற்றோர் அச்சமடையத் தேவையில்லை'
  குர்கானில் நிகழ்ந்த பள்ளி வாகனம் மீதான கல்வீச்சு சம்பவத்தால், தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் அச்சமடையத் தேவையில்லை என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேட்டுக்கொண்டுள்ளார்.
  இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: குர்கானில் பள்ளி வாகனம் மீது  புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பெற்றோர்கள்,  அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்,  பொது மக்கள் ஆகியோரிடமிருந்து தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புகளும், குறுஞ் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.
  கல்வீச்சு தொடர்பான விடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்த்த பிறகு கடும் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற சூழலில் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டுமா,  இல்லையா என்பது குறித்து பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். 
  ராஜபுத்தர சமூகத்தைச் சேர்ந்த நான், எனது சமூகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளைக் கேட்டு வளர்ந்தவன். ஆனால், தற்போது நடக்கும் பைக் எரிப்பு,  பேருந்து எரிப்பு,  பள்ளி வாகனங்கள் மீது கல்வீச்சு ஆகிய சம்பவங்களை வைத்து பார்க்கும்போது சமுக விரோதப்போக்கு அதிகரித்துள்ளது தெரிகிறது. 
  கலவரத்தில் ஈடுபடும் சிலர் ராஜபுத்திர சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல. இந்த விவகாரத்தில் தில்லி பெற்றோர் அச்சமடைய தேவையில்லை. தில்லியில் போதுமான  பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது என்றார் மணீஷ் சிசோடியா.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai