Enable Javscript for better performance
குழந்தைகள் மீதான பாலியில் வன்முறை: 2017-ம் ஆண்டில் 190 புகார்கள் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் மீதான பாலியில் வன்முறை: 2017-ம் ஆண்டில் 190 புகார்கள் பதிவு

    By DIN  |   Published on : 27th January 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, தாக்குதல்கள் தொடர்பாக தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் (டிசிபிசிஆர்) கடந்த ஓராண்டில் 190 புகார்கள் வரப்பெற்றதாக தில்லியில் நடைபெற்ற தேசிய பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.
    தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்துடன் இணைந்து தேசிய அளவிலான பயிலரங்கைஇரண்டு நாள்நடத்தியது.
    பள்ளிகளில் பாலியல் வன்முறையைக் குறைக்கும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதில் உணர்ச்சிசார் நுண்ணறிவின் பங்களிப்பு குறித்து இந்த பயிலரங்கம் நடைபெற்றது.
    இந்த பயிலரங்கின்போது கடந்த ஆண்டில் மட்டும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, தாக்குதல் தொடர்பாக தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு 190 புகார்கள் வரப்பெற்றதாகவும், இவற்றில் 107 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    இந்தப் பயிலரங்கில் டிசிபிசிஆர் உறுப்பினர் ஜோதி துஹன் ரதி பேசுகையில், " வீடுகளில் உறவினர்களால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்புடைய புகார்கள் டிசிபிசிஆருக்கு வரும்போது அந்த புகார்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (பிஓசிஎஸ்ஓ), குழந்தைகள் கடத்தல் தடுப்புச் சட்டம் வாயிலாக கையாளுகிறோம்.
    மேலும், வீடுகளில் குழந்தைகளின் நம்பிக்கைக்கு உரிய நபர்களே குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் சம்பவங்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக, குற்றத்தில் ஈடுபடுவோர் தந்தை, மாமா, சகோதரர் அல்லது குடும்பத்தின் ஏதாவது ஒரு உறுப்பினராக இருக்க முடியும் எனும்போது நமக்கு அதீத கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
    மேலும், இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் பள்ளி வளாகங்களில் பள்ளி வேளைநேரத்தின்போது நிகழ்வது மிகவும் துயரமானதாகும். இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும்போது பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனிக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்' என்றார் ரதி.
    இப்பயிலரங்கில், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காக்கும் நடவடிக்கையில் உணர்ச்சிசார் நுண்ணறிவு எப்படி முக்கியமான பங்களிப்பை அளிக்கிறது என்பது குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், பள்ளிகளில் நிகழும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து கட்டாயம் புகார் அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
    இந்த பயிலரங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட முதல்வர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் பங்கேற்றனர். அதேபோன்று, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai