Enable Javscript for better performance
தில்லியில் 30 துப்பாக்கிகளுடன் ம.பி. இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் சமூக விரோதக் கும்பல்களுக்கு விநியோகம் செய்வதற்காக வந்தபோது 30 துப்பாக்கிகளுடன் மத்திய பிரதேச மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறை உயர் அதிகாரி கூறியதாவது:
    சம்பவத்தன்று தில்லி காவல் துறையின் தனிப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கிகளை சட்டவிரோத கும்பலுக்கு விநியோகம் செய்வதற்காக தில்லி ரோஹிணியில் உள்ள செக்டார் 24-க்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
    இதையடுத்து, பகவான் மகாவீர் மார்க் கிராஸிங் பகுதியில் போலீஸார் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு ஆட்டோ ரிக்ஷாவில் ஒரு மர்ம நபர் வந்து இறங்கினார். அவர் ஒரு பையும் வைத்திருந்தார். தனது வாடிக்கையாளருக்காக சிறிது நேரம் காத்திருந்தார். அவரையும், அவரிடம் ஆயுதங்கள் வாங்க வரவிருந்த நபரையும் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டனர். ஆனால், போலீஸார் இருப்பதை உணர்ந்த அந்த நபர் அங்கிருந்து பர்வாலா பக்கம் தப்பிச் செல்ல முயன்றார்.
    இதையடுத்து, போலீஸார் அவரைச் சுற்றி வளைத்து சரணடையுமாறு எச்சரித்தனர். ஆனால், அவர் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டார். அப்போது, போலீஸார் அவரை லாவகமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 7.65 எம்எம் ரகத்தைச் சேர்ந்த 30 துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
    இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தைச் சேர்ந்த கைலாஷ் சோலங்கி என்பதும் தில்லி, ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த சட்டவிரோத கும்பலுக்கு துப்பாக்கிகள் விநியோகத்தில் அவர் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
    மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டவிரோத ஆயுத விநியோகத்தில் தாம் ஈடுபட்டு வந்ததாகவும் இதுவரை 200 துப்பாக்கிகள் வரை விற்றுள்ளதாகவும் போலீஸாரிடம் கூறினார். இவரது கும்பலின் தலைவனாக மத்திய பிரதேச மாநிலம் மானவார் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (எ) ராஜு செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai