Enable Javscript for better performance
மருந்து தயாரிப்பு நிறுவன இயக்குநர் கைது: ரூ.5,000 கோடி வங்கி மோசடி விவகாரம்- Dinamani

சுடச்சுட

    

    மருந்து தயாரிப்பு நிறுவன இயக்குநர் கைது: ரூ.5,000 கோடி வங்கி மோசடி விவகாரம்

    By DIN  |   Published on : 27th January 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கியில் இருந்து ரூ.5,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் ராஜ்பூஷண் ஓம்பிரகாஷ் தீட்சித் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
    அவர், ஒரு நாள் அமலாக்கத் துறை காவலில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டார்.
    ஆந்திர வங்கியில் இருந்து ரூ.5,000 கோடிக் கடன் வாங்கிய ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம், அதைத் திருப்பிச் செலுத்தாததை அடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
    அதன் அடிப்படையில், அந்த நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் இயக்குநர்களுக்கு எதிராகவும், கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, வழக்கில் தொடர்புடைய தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ககன் தவான் கடந்த நவம்பர் மாதத்திலும், ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குநர் அனூப் பிரகாஷ் கார்க் இந்த மாதத் தொடக்கத்திலும் கைது செய்யப்பட்டனர்.
    இந்நிலையில், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர்களின் ஒருவரான ராஜ்பூஷண் ஓம்பிரகாஷ் தீட்சித்தை அமலாக்கத் துறை வியாழக்கிழமை இரவு கைது செய்தது.
    இந்த வழக்கில் கைது செய்யப்படும் மூன்றாவது நபர் இவர்.
    அதைத் தொடர்ந்து, தில்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி சுமீத் ஆனந்த் முன்னிலையில் ராஜ்பூஷண் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், 14 நாள் காவலில் அனுப்பி வைக்குமாறு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞர் நிதேஷ் ராணா கோரிக்கை விடுத்தார்.
    எனினும், ராஜ்பூஷணை ஒரு நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவரை சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அமலாக்கத் துறைக்கு அவர் உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai