Enable Javscript for better performance
ராணுவ பாதையாக மாறிய ராஜபாதை- Dinamani

சுடச்சுட

    

    நாட்டின் 69-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டங்களும், ராணுவ வீரர்களின் அணிவகுப்புகளும், போர் விமானங்களும், போர் வாகனங்களும் பங்கேற்ற அணிவகுப்புகள் தில்லி ராஜபாதை சாலையை வெள்ளிக்கிழமை ராணுவ பாதையாக மாற்றி காட்சியளித்தது.
    ஆசியான் நாடுகளின் தலைவர்கள் ணசிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கோலாகலமான அணிவகுப்புகளைக் கண்டு ரசித்தனர்.
    இந்த அணிவகுப்பில் ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத், சத்தீஸ்கர், கேரளம், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், அகில இந்திய வானொலி ஆகியவற்றின் சார்பில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
    வெளியுறவு, பழங்குடியினர் நலத்துறை, இளைஞர் நலன்-விளையாட்டு ஆகிய அமைச்சகங்களின் ஊர்திகளும் அவற்றில் அடங்கும்.
    இந்த ஊர்திகள் அனைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கலை, கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
    வருமான வரித்துறை சார்பில் அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியானது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் தொடங்கிய கருப்புப் பண எதிர்ப்புப் போரை வெளிக்காட்டும் வகையில் இருந்தது.
    அணிவகுப்பில் முப்படைகளின் ஊர்திகளும் பங்கேற்றன. கடற்படையின் ஊர்தியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் விமானம்தாங்கி போர்க்கப்பலான ஐஏசி விக்ராந்த்தின் மாதிரி, நிர்பய் ஏவுகணை, அஸ்வினி ராடார் அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருந்தன.
    விமானப்படையின் அலங்கார ஊர்தியை அப்படையின் மூன்று பெண் அதிகாரிகள் வழிநடத்தி வந்தனர். அதில் தேஜஸ் போர் விமானம், ருத்ரா ஹெலிகாப்டர், ஆருத்ரா ராடார், ஆகாஷ் ஏவுகணை ஆகியவற்றின் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன.
    வெளியுறவு அமைச்சகம் சார்பில் பங்கேற்ற 2 ஊர்திகளில் இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் மத ரீதியிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகளும், வடிவங்களும் இடம்பெற்றிருந்தன.
    அவற்றில் ஒன்று, வரலாற்றுக் காலத்தில் புத்த மதக் கல்வி நிலையமாக விளங்கிய நாளந்தா பல்கலைக்கழம் தொடர்பான மாதிரியும் அடங்கும்.ற்றொரு அலங்கார ஊர்தியில் புத்த கயையில் உள்ள மகாபோதி கோயில் மற்றும் புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் ஆகியவற்றின் மாதிரிகள் இடம்பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
    மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலங்கார ஊர்தியிலும் புத்த மதம் தொடர்பான அம்சங்கள் இருந்தன.
    குடியரசு தின விழாவில் அகில இந்திய வானொலியின் அலங்கார ஊர்தி முதல் முறையாகப் பங்கேற்றது.
    அதில் மகாத்மா காந்தி வானொலியில் ஆற்றிய உரை தொடர்பான மாதிரி வடிவம் அமைக்கப்பட்டிருந்தது.
    அதேபோல் குஜராத் மாநில அலங்கார ஊர்தியில் காந்தியடிகள் ராட்டையில் நூல் நூற்கும் சிலை, அவரது மூன்று குரங்குகள் பொம்மை, மகாத்மாவின் வாழ்வுடன் தொடர்புடைய அம்சங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai