Enable Javscript for better performance
விமானப்படை வீரருக்கு மறைவுக்குப் பிந்தைய அசோக சக்ரா விருது- Dinamani

சுடச்சுட

    

    விமானப்படை வீரருக்கு மறைவுக்குப் பிந்தைய அசோக சக்ரா விருது

    By DIN  |   Published on : 27th January 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட இந்திய விமானப்படையின் கருடா கமாண்டோ படை வீரர் ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு, இறப்புக்குப் பிந்தைய அசோக சக்ரா விருதை வழங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார்.
    தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்த விருதை ஜோதி பிரகாஷ் நிராலாவின் மனைவி சுஷ்மானந்தும், நிராலாவின் தாயார் மாலதி தேவியும் பெற்றுக் கொண்டனர். விருதை வழங்கி முடிந்தபோது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். அவர் தனது கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
    அசோக சக்ரா விருது அளிக்கப்பட்ட கமாண்டோ வீரர் நிராலா, இந்திய விமானப் படையின் கருடா சிறப்புப் படையைச் சேர்ந்தவர் ஆவார். இப்படைப்பிரிவு பின்னர் விமானப் படையில் இருந்து பிரிக்கப்பட்டு, ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையுடன் சேர்க்கப்பட்டது. அது ஜம்மு-காஷ்மீரில் "ஆபரேஷன் ரக்ஷக்' என்ற பெயரில் இயங்குகிறது.
    இப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள சந்தேர்கர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கினர். அவர்கள், அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை நெருங்கி, மிக அருகில் இருந்தபடி தாக்குதல் நடத்தினர்.
    அப்போது நிராலா மிகச்சிறந்த போர்த் தந்திர உபாயத்துடன் செயல்பட்டு, பயங்கரவாதிகள் தப்பித்துச் செல்ல முடியாத வகையில் அரண் போல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவ்வாறு மிக நெருங்கிச் சென்று தாக்குதல் நடத்துவதற்கு அசாத்திய வீரமும், தொழில் திறமையும் அவசியம்.
    அப்போது அந்த வீட்டில் பதுங்கியிருந்த 6 பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும், வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியபடியும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
    அந்த நேரத்தில் நிராலா தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் திறன்வாய்ந்த, கனரக துப்பாக்கிகள் மூலம் பதிலடி கொடுத்தார். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, இருவர் படுகாயமடைந்தனர். இதனிடையே, இரு தரப்புக்கும் இடையே நீடித்த துப்பாக்கிச் சண்டையில் வீரர் நிராலா குண்டடி பட்டு வீரமரணமடைந்தார். இறுதியில் 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
    நிராலா காட்டிய போர்த் திறத்தாலும், மிக உயர்ந்த தியாகத்தாலும் அவருக்கு அமைதிக்காலத்தில் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான அசோக சக்ரா விருது, இறப்புக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai