Enable Javscript for better performance
வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 2 சிறுமிகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    வடமேற்கு தில்லியில் வீட்டின் இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு சிறுமிகளை போலீஸார் மீட்டனர். மேலும், அவர்கள் இருவரையும் வேலைக்கு அமர்த்தி, துன்புறுத்திய புகார் தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: வடமேற்கு தில்லி, பீதம்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரு சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்பவத்தன்று மகளிர் உதவி தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்தார்.
    இதையடுத்து, மகளிர் ஹெல்ப்லைன் அதிகாரிகள் மற்றும் போலீஸார் சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அது ஒரு வணிகரின் வீடு என்பது தெரியவந்தது. வீட்டில் இருந்த வணிகரின் மகன் புகார் தொடர்புடைய இரு சிறுமிகள் ( 9 மற்றும் 7 வயது) வீட்டுக்குள் தங்களுக்குத் தெரியாமல் நுழைந்திருக்கலாம் எனக் கூறினார். பின்னர், போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஒரு இருட்டு அறையில் சிறுமிகள் இருவரும் உணவில்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த இரு சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.
    அவர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப வறுமையின் காரணமாக ஒரு பெண்ணுடன் வேலைக்காக பெற்றோர் மூலம் தில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அந்தப் பெண் தங்களை ஒருவரிடம் விற்றுவிட்டதாகவும் கூறினர்.
    வீட்டு வேலைக்கு சேர்த்துவிடப்பட்ட நிலையில், தங்கள் இருவரையும் வீட்டு உரிமையாளர் துன்புறுத்தியதாக அந்த சிறுமிகள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் அரசு காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களது பெற்றோர்களைக் கண்டறிந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இரு சிறுமிகளையும் வீட்டு வேலைக்கு அமர்த்திய சம்பவத்தில் வணிகரின் மகன் மீது உரிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai