Enable Javscript for better performance
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: நாளை முதல் தினம்தோறும் விசாரணை : நாகபுரி பயணத்தை ஒத்திவைத்- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: நாளை முதல் தினம்தோறும் விசாரணை : நாகபுரி பயணத்தை ஒத்திவைத்தார் கேஜரிவால்

    By DIN  |   Published on : 28th January 2018 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகித்ததாக 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 29) முதல் தினம்தோறும் நடைபெறுகிறது.
    இதற்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணியில், தகுதி நீக்கப்பட்ட தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதால், மகாராஷ்டிர மாநிலம் நாகபுரிக்கு முதல்வர் கேஜரிவால் மேற்கொள்ள இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
    பாஜக ஆட்சி செய்து வரும் நாகபுரி மாநகராட்சி மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட வருமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு மத்திய  நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று சனிக்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு நாகபுரி செல்ல கேஜரிவால் முடிவு செய்திருந்தார். 
    அவருடன் தகுதி நீக்கப்பட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டும் செல்ல இருந்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை முதல் தினம்தோறும் விசாரணை தொடங்க உள்ளதால், அதற்கான ஆவணங்களை சரி பார்க்கும் பணியில் கைலாஷ் கெலாட் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 
    ஆகையால், திட்டமிட்டபடி அவரால் நாகபுரிக்கு செல்ல முடியவில்லை. 
    இதனால் முதல்வர் கேஜரிவாலும் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
    ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. 
    இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, மத்திய சட்ட அமைச்சகம், தில்லி சட்டப்பேரவையில் இருந்து 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிட்டது.
    இந்த அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி 8 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
    அதில், மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை என்றாலும், தகுதி நீக்கப்பட்ட 20 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
    இந்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், 20 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் 29-ம் தேதி வரை இடைத்தேர்தல் அறிவிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, 29-ம் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை தினம்தோறும் நடைபெறும் என தெரிவித்திருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai