Enable Javscript for better performance
"சீலிங்' விவகாரம்: ஒருங்கிணைந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அமளி: உருமாற்றக் கட்டணம் செலுத்தாதவர்களுக்க- Dinamani

சுடச்சுட

    

    "சீலிங்' விவகாரம்: ஒருங்கிணைந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அமளி: உருமாற்றக் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு சலுகை

    By DIN  |   Published on : 28th January 2018 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீலிங் விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்க கூடிய, தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கும், ஆளும் பாஜக உறுப்பினர்களுக்கும் சனிக்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. 
    இதனிடையே, உருமாற்றக் கட்டணத்தை இதுவரை செலுத்தாத வணிகர்களுக்கு அபராதம் மற்றும் வட்டியில் இருந்து விலக்களிக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
    குடியிருப்புத் தளத்தை வணிகத் தளமாக மாற்றுவதற்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய உருமாற்றக் கட்டணத்தை செலுத்தத் தவறிய வணிக வளாகங்களுக்கு, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவின்படி டிசம்பர் 22- ஆம் தேதி முதல் சீல் வைக்கப்பட்டு வருகிறது.
    இந்த சீல் வைப்பு நடவடிக்கைக்கு எதிராக வணிக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றன. சீல் வைப்பு நடவடிக்கையில் பாஜகவும் ஆம் ஆத்மியும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. 
    இந்நிலையில் சீல் வைப்பு நடவடிக்கை தொடர்பாக கூட்டாக முடிவெடுக்க தில்லியின் மூன்று மாநகராட்சி மேயர்களும் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை தில்லி சிவிக் சென்டரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கும், பாஜக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று மாநகராட்சிகளின் நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள் அவையில் இருந்து தாற்காலிகமாக வெளியே பிறகு அமைதி திரும்பியது.இதையடுத்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேறின.
    இக்கூட்டம் முடிவடைந்ததும், வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால், கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் நீமா பகத், மேற்கு தில்லி மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    பத்து ஆண்டுகளுக்கான உருமாற்றக் கட்டணத்தை செலுத்திய வணிகர்களிடம் இருந்து கூடுதல் உருமாற்றுக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இது வரை உருமாற்றக் கட்டணம் செலுத்தாத வணிகர்களுக்கு அபராதம், வட்டி ஆகியவற்றில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
    தில்லியில் உள்ள 351 சாலைகளும் வணிகம்சார்ந்த சாலைகளாக உடனடியாக அறிவிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், இச்சாலைகளில் உள்ள கடைகள் தொடர்பாக 90 நாள்களுக்குள் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப் படவேண்டும்எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தரைத்தளங்களில் வணிக வளாகங்கள் அமைக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக மாநகராட்சிகள் விரிவாக ஆராயவுள்ளன. 
    தில்லியில் நடைபெற்று வரும் சீலிங் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி மத்திய வீட்டு வசதி நகர வளர்ச்சி அமைச்சகத்துக்கு கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றனர்.
    முடிவுக்கு வரவேற்பு: உருமாற்றக் கட்டணம் செலுத்தாத வணிகர்களுக்கு அபராதத் தொகை மற்றும் வட்டியில் இருந்து விலக்களிப்பதாக தில்லி மாநகராட்சி ஒருங்கிணைந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை வடக்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் திலக்ராஜ் கட்டாரியா வரவேற்றுள்ளார்.
     இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: உருமாற்றக் கட்டணம் செலுத்தாத வணிகர்களுக்கு வட்டி, அபராதத் தொகையில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதே போல, சீலிங் நடவடிக்கைக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் மாநகராட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்தக் கூட்டத்தை குழப்பும் வகையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.

     

    துணைநிலை ஆளுநருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்
    சீலிங் நடவடிக்கைவிவகாரம் தொடர்பாக சந்திக்க நேரம் ஒதுக்குமாறு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்குஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர். 
    இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளரும், கிரேட்டர் கைலாஷ் சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினருமான செளரவ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    தில்லி முழுவதும் உருமாற்றக் கட்டணம் என்ற பெயரில் முக்கியச் சந்தைகளில் மாநகராட்சிகள் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு எதிராக வணிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து பாஜக பொய் கூறி வருகிறது.
    பாஜக தலைமையிலான மாநகராட்சி, மத்திய அரசால் சீலிங் நடவடிக்கைக்கு தீர்வு காண முடியும். தில்லி மாஸ்டர் பிளான் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி வளர்ச்சி ஆணையத்தால் மட்டுமே முடியும். 
    இந்த வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உள்ளார். எனவே, இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு ஜனவரி 29-ஆம் தேதி துணைநிலை ஆளுநரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளோம். அவர் எங்களுக்கு நேரம் ஒதுக்கும்பட்சத்தில் சீலிங் நடவடிக்கை தொடர்பாக உள்ள உண்மைகளையும், தீர்வுக்காண நடவடிக்கைகளையும் எடுத்துரைப்போம்' என்றார் செளரவ் பரத்வாஜ்.

    உச்ச நீதிமன்றத்தில் முறையிட தீர்மானம்
     ஒருங்கிணைந்த மாநகராட்சிக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டன. சீலிங் நடவடிக்கைக்கு 6 மாதங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட வேண்டும் என்றும் மாஸ்டர் பிளான் 2021 விவகாரத்தை தில்லி அரசு மத்திய அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai