Enable Javscript for better performance
செங்கோட்டை மைதானத்தில் பாரத விழா: தமிழ்நாடு அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    செங்கோட்டை மைதானத்தில் பாரத விழா: தமிழ்நாடு அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகள்

    By DIN  |   Published on : 28th January 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி செங்கோட்டை மைதானத்தில் நடைபெற்று வரும் பாரத விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் சனிக்கிழமை கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு தின விழாவை ஒட்டி தில்லி செங்கோட்டை மைதானத்தில் "பாரத விழா' எனும் 6 நாள் விழா ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஏற்பாட்டில் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் பங்கேற்புடன் தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கலாசார விழா நடைபெற்று வருகிறது.
    இதில் தமிழ்நாடு அரசு சார்பாக பாரம்பரிய உணவு, கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள் ஆகியவற்றின் விற்பனை மற்றும் கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிராமிய கலைகளான கரகாட்டம், காவடியாட்டம், கைச்சிலம்பாட்டம், பம்பை போன்றவை சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட 42 கலைஞர்கள் பங்கேற்றனர். 
    தமிழ்நாடு சுற்றுலாத் துறையினால் அமைக்கப்பட்டிருந்த சுற்றுலா அரங்கத்தில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள் பற்றிய விளக்க குறிப்புகள் விநியோகிக்கப்பட்டன. தமிழ்நாடு கைத்தறி துறை அரங்கில் பருத்தி மற்றும் பட்டாடைகளும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் அரங்கில் தாமிரம் மற்றும் ஐம்பொன் சிலைகளும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
    தமிழ்நாடு இல்லம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட உணவு அரங்கத்தில் தமிழக உணவு வகைகளான இட்லி தோசை, பணியாரம் வடை, சாம்பார் போன்றவற்றை பிற மாநிலத்தவரும் ருசித்து மகிழ்ந்தனர். தமிழகத்தின் கலை நிகழ்ச்சிகளையும் கண்காட்சிகளையும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
    இந்த விழாவுக்கான மாநில அரசு தரப்பு ஒருங்கிணைப்பு பணிகளை தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர்கள் ஜஸ்பீர் சிங் பஜாஜ், நா.முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை உதவி இயக்குநர் வில்லியம் பேட்ரிக், தில்லி பிரிவு அலுவலர் ஏ. ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பாரத விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai