Enable Javscript for better performance
பட்ஜெட் குறித்து துறைகளுடன் விவாதிக்க 3 நாள் கூட்டத்திற்கு தில்லி அரசு ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    பட்ஜெட் குறித்து துறைகளுடன் விவாதிக்க 3 நாள் கூட்டத்திற்கு தில்லி அரசு ஏற்பாடு

    By DIN  |   Published on : 28th January 2018 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் 2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பது குறித்து தில்லி அரசுத் துறைகளுடன் விவாதிப்பதற்காக அடுத்த மாதம் 3 நாள் கூட்டத்திற்கு தில்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    அதன்படி, 2017-2018-ஆம் ஆண்டின் விளைவு வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான சாதனைகள் குறித்த விவரங்களை தொகுத்து அளிக்குமாறு தில்லி அரசின் அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
    அரசுத் துறைகளின் செலவின நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கமாக இந்த நடவடிக்கையை தில்லி அரசு எடுத்துள்ளதாக தில்லி அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "வரும் 2018-2019-ஆம் ஆண்டுக்கான விளைவு வரவு-செலவுத்திட்டம் தயாரிப்பது குறித்து விவாதிப்பதற்காக துறை வாரியான மூன்று நாள் கூட்டம் அடுத்த மாதம் 7-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.
    முந்தைய ஆண்டுகள்போலவே, வரக்கூடிய நிதி ஆண்டின் தில்லி அரசின் நிதிநிலை அறிக்கையில் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து ஆகியவற்றுக்கு மிகுந்த முனைப்புக் காட்டப்பட உள்ளது. நடைபெறவுள்ள துறை ரீதியிலான கூட்ட விவாதத்தின்போது தற்போதைய செயல்பாடுகளின் வெளிப்பாடுகள் மற்றும் விளைவு முடிவுகள் மீதும், வரக்கூடிய பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
    நிகழ்ச்சி அட்டவணையின்படி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், எஸ்சி, எஸ்டி, சமூக நலம், கல்விக் கலை, கலாசாரம், மொழி, தொழிலாளர் மற்றும் தில்லி சார்நிலை பணியாளர் தேர்வு வாரியம் (டிஎஸ்எஸ்எஸ்பி) ஆகிய துறைகளின் செலவினம் மற்றும் முன்மொழிவுகள் மீதான விவாதம் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறும்.
    சுகாதாரம், உள்துறை, சுற்றுலா மேம்பாடு, சுற்றுச்சூழல் துறைகளின் மீதான விவாதம் பிப்ரவரி 8-ஆம் தேதியும், பொதுப் பணித் துறை, தில்லி ஜல் போர்டு, நகர்ப்புற வளர்ச்சி, வருவாய் தொடர்புடைய துறைகளின் மீதான விவாதம் நவம்பர் 9-ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
    கடந்த ஆண்டு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 2017-18-ஆண்டுக்கான விளைவு வரவு-செலவுத்திட்டத்தை தாக்கல் செய்தார். அப்போது, தில்லி அரசின் திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடையும் வகையிலும், திட்டங்களைக் கண்காணித்து அவ்வப்போது மதிப்பீடு செய்யும் வகையிலும் தில்லியில் முதல்முறையாக விளைவு வரவு-செலவுதிட்டத்தை கடந்த ஆண்டு தில்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
    விளைவு வரவு-செலவுத்திட்டமானது வெளிப்படைத் தன்மை, செலவினத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது தவிர, அதிகாரிகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கும் உதவிடும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai