Enable Javscript for better performance
இடைத் தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மிக்கு தைரியம் உள்ளதா? ஷீலா தீட்சித் சவால்- Dinamani

சுடச்சுட

  

  இடைத் தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மிக்கு தைரியம் உள்ளதா? ஷீலா தீட்சித் சவால்

  By DIN  |   Published on : 29th January 2018 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் இடைத் தேர்தலை சந்திக்க தைரியம் உள்ளதா? என ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் சவால் விடுத்துள்ளார். மேலும், கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது தில்லி மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
  ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரத்தில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக, தில்லி உயர் நீதிமன்றத்தில் 20 பேரும் மனுத் தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த  நீதிமன்றம், குடியரசுத் தலைவரின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. எனினும், 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிப்பு போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளை வரும் 29-ஆம் தேதி வரை மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
  இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித், தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
  தில்லி சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றவில்லை. கேஜரிவாலின் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இதனால், 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஆம் ஆத்மி ஈடுபட்டு வருகிறது.
  20 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, அவர்கள் (ஆம் ஆத்மி) நீதிமன்றத்துக்கு சென்றது ஏன்?
  எந்தவொரு கட்சியும், ஏற்கெனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவதில் நம்பிக்கை கொண்டிருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அதற்கான விளைவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார் அவர்.
  தில்லியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால், அது காங்கிரஸுக்கு நல்ல வாய்ப்பாக அமையுமா? என்ற கேள்விக்கு பதிலளித்து, ஷீலா  தீட்சித் கூறியதாவது:
  தில்லியில் கடந்த காலங்களில் காங்கிரஸ் தந்த நல்லாட்சிக்கும், தற்போதைய ஆம் ஆத்மி ஆட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர். இதுபோன்ற சூழலில், இடைத் தேர்தல் நடைபெற்றால், அது காங்கிரஸுக்கு நல்ல வாய்ப்பாகவே அமையும். இடைத் தேர்தலில் சிறப்பான வெற்றியை பெறுவோம்.
  தற்போதைய ஆம் ஆத்மி அரசு நிர்வாக திறமையற்றதாக உள்ளது. சாலைகள் பழுதுபார்ப்பு, பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவது என எந்தப் பணியும் நடைபெறவில்லை. இதனால், ஆம் ஆத்மி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றார் ஷீலா தீட்சித்.

  இடைத் தேர்தலில் போட்டியா? 
  தில்லியில் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றால், ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவீர்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ஷீலா தீட்சித் அளித்த பதில் வருமாறு:
  இடைத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. கட்சி மேலிடம் விருப்பப்பட்டால், வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன்.
  தில்லியில் 15 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சி செய்திருக்கிறோம். எந்த தடுமாற்றமும், பிரச்னையும் இல்லாமல் நல்லாட்சியை வழங்கியிருக்கிறோம். தில்லி மெட்ரோ ரயில் திட்டம், பல்வேறு பாலங்கள், பசுமை பரப்புகள் ஆகியவை காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளால் விளைந்தவை என்பதை எந்த கட்சியாவது மறுக்க முடியுமா? என்றார் ஷீலா தீட்சித்.
  இடைத் தேர்தலில் காங்கிரஸ் வியூகம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, "இப்போதே அது குறித்து கூறுவது சரியாக இருக்காது. எனினும், புதியவர்களுக்கும் பெண்களுக்கும் வாய்ப்பளிப்பது கட்சிக்கு வெற்றியை தேடித் தரும் என்பது எனது கருத்து' என்றார்.
  தில்லி முதல்வராக, 1998-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 3 முறை ஷீலா தீட்சித் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai