Enable Javscript for better performance
இலங்கை மீன்வள மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை மீன்வள மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

    By DIN  |   Published on : 29th January 2018 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை அரசின் மீன்வள மசோதா தொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
    இதுகுறித்து, நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி. வேணுகோபால் கூறியதாவது: 
    சட்டவிரோதமாக, கடல் எல்லையை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதாவை இலங்கை அரசு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கை அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தினேன். 
    உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவால், தமிழகத்தில் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தினேன். தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து தில்லிக்கு உயர் கல்வி பயில வரும் மாணவர்கள் சிலர் அண்மையில் இறந்துள்ளனர்.
    இது தற்கொலையா? கொலையா எனத் தெரியவில்லை. இது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். தில்லியில் பயிலும் வெளிமாநில மாணவர்களுக்கு நல்ல சூழலை உருவாக்க மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    மெட்ராஸ்  உயர் நீதிமன்றம் எனும் பெயரை தமிழில் மாற்ற வேண்டும் என்பதையும்,  விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai