Enable Javscript for better performance
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் காந்தி நினைவு தின கண்காட்சி, கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லித் தமிழ்ச் சங்கத்தில் காந்தி நினைவு தின கண்காட்சி, கருத்தரங்கம்

    By DIN  |   Published on : 29th January 2018 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி தமிழ்ச் சங்கம்,  தேசிய காந்தி அருங்காட்சியகம்,  சென்னையில் உள்ள காந்தி கல்வி நிலையம் ஆகிய அமைப்புகள் இணைந்து காந்தி நினைவு தினத்தை ஒட்டி அவர் குறித்த கண்காட்சி, கருத்தரங்கம் உள்ளிட்ட  நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. 
    இதையொட்டி,  தில்லித் தமிழ்ச் சங்க திருவள்ளுவர் அரங்கத்தில் காலை 10 மணிக்கு காந்தியின் அரிய புகைப்படங்களின்  கண்காட்சியை  தில்லி தமிழ்ச் சங்க மூத்த உறுப்பினர் என்.சங்கரராமன் திறந்துவைத்தார்.  இக்கண்காட்சி குறித்து  புது தில்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநரும்,  கண்காட்சி அமைப்பாளருமான அ. அண்ணாமலை கூறியதாவது: 
    காந்தியடிகளின் வாழ்வில் தமிழர்கள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தினர். விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராட  தமிழர்கள் தனக்கு உந்து சக்தியாக இருந்ததாக காந்தி கூறியுள்ளார். காந்திக்கும், தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் உள்ள உறவை கூறுவதே இக்கண்காட்சியின் நோக்கமாகும். தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் தமிழர்கள் போராடியது காந்தியை ஈர்த்தது.  தமிழர்களின் தியாகங்களை உலகம் முழுவதும் அறியச் செய்தவர் காந்தி.  
    தென்னாப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டத்தில் காந்தியுடன் தோளோடு தோள் நின்று போராடிய தம்பி நாயுடு என்ற தமிழரின் வாழ்க்கை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1896-இல் தமிழ்நாட்டுக்கு முதல் முறையாக காந்தி  வருகை தந்தார்.  அதன் தொடர்சியாக,  20 தடவை அவர் தமிழ் நாட்டுக்கு வந்துள்ளார். அப்படங்களைக் காட்சிப்படுத்தியுள்ளோம்.  இக்கண்காட்சி,  ஜனவரி 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்றார் அண்ணாமலை.
    கருத்தரங்கம்: இதைத் தொடர்ந்து, "அறிவோம் காந்தியை' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர்  இரா.அறவேந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில், கட்டுரையாளர் பி.ஏ.கிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினார்.
    "தமிழர், தமிழ்நாடு, காந்தி' என்ற தலைப்பில் காந்தி கல்வி நிலைய இளைஞர் நல ஆலோசகர் சு.சிவலிங்கம் பேசுகையில், "ஆங்கிலேயர்கள் போல மேற்கத்திய ஆடைகள் அணிந்து வந்த காந்தியடிகள், 1913- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள தமிழ்க் கூலித் தொழிலாளர்களின் நிலை கண்டு தனது உடைப் பழக்கத்தை முதல் தடவையாக மாற்றிக் கொண்டார். 1921- ஆம் ஆண்டு மதுரைக்கு வந்த காந்திடிகள் அங்குள்ள ஏழை மக்களின் நிலையறிந்து இரண்டாவது தடவையாக தனது உடையில் மாற்றம் செய்தார். அரையாடைக்கு மாறினார்.  
    உடையில் மட்டுமல்ல, காந்தியடிகளின் சிந்தனையிலும், தமிழர்களின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர்.  1912-ஆம் ஆண்டின்போது  தென்னாப்பிரிக்காவில்  சிறை செல்வதற்காக 11 பெண்கள் முன்வந்தனர். அவர்களில் 10 பேர் தமிழ்ப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது' என்றார் அவர். 
    இக்கருத்தரங்கில்  'காந்தியடிகளின் வாழ்க்கையே செய்தி' என்ற தலைப்பில் தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ.அண்ணாமலை ,  "காந்தியடிகளின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்' என்ற தலைப்பில் சென்னை காந்தி கல்வி நிலைய இயக்குநர் எஸ்.ஜெயராஜ்,  "காந்தியும் கல்வியும்' என்ற தலைப்பில் தில்லி தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் கி.பென்னேஸ்வரன்,  "பெண்களின் தியாகம்' என்ற தலைப்பில் பிரேமா அண்ணாமலை,  "இளைஞர்களுக்கான காந்தி' எனும் தலைப்பில், காந்தி கல்வி நிலையத்தை சேர்ந்த சு.சரவணன்,  "காந்தியும் கீதையும்' என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாளர் ப.ராஜாராம் ஆகியோர் உரையாற்றினர்.  கருத்தரங்க நிறைவில் இந்திய அரசின் கூடுதல் செயலர் வெ.திருப்புகழ் பேசினார். காந்தியின் பேத்தி தாரா பட்டாச்சார்யா கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.
    "காந்தி' ஆவணப்படம்: மாலையில்,  ஏ.கே.செட்டியார் தயாரித்த காந்தியடிகள் பற்றிய முதல் ஆவணப்படம் திரையிடப்பட்டது.  இந்த  ஆவணப்படத்தை மீட்டுருவாக்கம் செய்த வள்ளி முத்தையா,  அண்ணாமலை,  பா.சிவக்குமார், சு.சிவலிங்கம், பிரேமாஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai