Enable Javscript for better performance
பனிமூட்டம்: 43 ரயில்கள் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை  கடும் பனி மூட்டம் நிலவியது. தில்லியில் மட்டும் குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.  பனிமூட்டம் காரணமாக பல பகுதிகளில் இருந்து  வட மாநிலங்களுக்கு வரக் கூடிய 43 ரயில்கள் தாமதமாகின. 18 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக  வடக்கு ரயில்வே அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. 
    தில்லியில் தற்போது பனியின் தாக்கம் காலை வேளைகளில் அதிகமாக காணப்படுகிறது. சில தினங்களாகவே காலை வேளையில் குறைந்தபட்ச வெப்பநிலை குறைவாகவே இருந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலையிலும் இதன் தாக்கம் காணப்பட்டது. 
    குறைந்தபட்ச வெப்பநிலை இந்த பருவத்தின் சராசரியை விட  3 புள்ளிகள் குறைந்து 6.4 டிகிரி செல்சியஸாக  பதிவாகியிருந்தது. அதிகாலை வேளையில் காண்புதிறன் 100 மீட்டருக்கும் குறைவாக இருந்தது.  காற்றில் 100 சதவீதம் ஈரப்பதம் காணப்பட்டதாக  வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
    தில்லி தவிர  நொய்டா,  குருகிராம் பகுதிகளிலும் காலை வேளையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.  பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி நிலவரப்படி தில்லி உள்ளிட்ட  வட  மாநிலங்களுக்கு வரும் 43 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்ததாகவும்,  18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும்,  ஏழு ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டதாகவும் வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.
    சனிக்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai