Enable Javscript for better performance
வழக்குரைஞர்களின் சொத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிமன்றம் உ- Dinamani

சுடச்சுட

    

    வழக்குரைஞர்களின் சொத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம்: அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 30th January 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் மூவரின் கார்கள் உள்ளிட்ட சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
    இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. இந்தச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
    தில்லி உயர் நீதிமன்ற வழக்குரைஞர் விகாஸ் பவா. கிரேட்டர் கைலாஸில் உள்ள இவரது அலுவலகக் கட்டம் மற்றும் கார் மீது ஜனவரி 9-ஆம் தேதி தீவைக்கும் முயற்சி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
    இதேபோன்று, தில்லி உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருப்பவர் கீர்த்தி உப்பர்.
    நிஜாமுதீன் மேற்கு பகுதி உள்ள இவரது வீட்டின் முன்பாக ஜனவரி 22-ஆம் தேதி கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, மர்ம நபர்களால் அக்காருக்கு தீவைக்கப்பட்டது.
    முன்னதாக, ஜனவரி 4-ஆம் தேதி கிழக்கு தில்லியில் வழக்குரைஞர் ரவி சர்மா என்பவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு கார்கள் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக தனித் தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    இச்சம்பவங்களுக்கு தில்லி உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட மூன்று வழக்குரைஞர்களும் சக பெண் வழக்குரைஞருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையேயான சொத்து விவகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் ஆஜராகி வருவதாக கூறப்படுகிறது.
    இந்நிலையில், மர்ம நபர்கள் மூன்று வழக்குரைஞர்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவத்தை கண்டித்து ஜனவரி 24-ஆம் தேதி தில்லி உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    இதையடுத்து, ஜனவரி 25-ஆம் தேதி உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    இந்நிலையில், இந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன் வந்து விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
    வழக்குரைஞர்களின் சொத்துகள் சேதப்படுப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை தருவதாக உள்ளது. ஏனெனில், இந்த சம்பவங்ளால் வழக்குரைஞர்களின் உயிர், உடைமைக்கு இழப்பை ஏற்படுத்தி இருந்திருக்க முடியும்.
    மனுதாரர்களுக்கு ஆதரவாக வாதிடும் வழக்குரைஞர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
    இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் இரு நாள்களில் தில்லி காவல் துறை சமர்ப்பிக்க வேண்டும்.
    மேலும், மூத்த காவல் துறை அதிகாரியின் கையெழுத்திடப்பட்ட அறிக்கையாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த அறிக்கையானது தில்லி காவல் துறை ஆணையரிடம் காட்டப்படும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai